பாரீஸ் ஒலிம்பிக் : துப்பாக்கி சுடுதலில் முதல் தங்கம் வென்றது சீனா!
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில் சீனா துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரீஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இதில், முதல் நாளான நேற்று மொத்தம் 14 தங்கப்பதக்கங்களுக்கு போட்டிகள் நடக்கின்றன. இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் சீனா தனது முதல் தங்கத்தை வென்று அசத்தியது. 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி பிரிவில் சீனா தங்கபதக்கத்தை வென்றுள்ளது. சீன ஜோடியான ஹுவாங் யூடிங் மற்றும் ஷெங் லிஹாவோ கொரிய ஜோடியான கியூம் ஜிஹியோன் மற்றும் பார்க் ஹஜுன் ஜோடியை வீழ்த்தியது.
இதையும் படியுங்கள் : 9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசனாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு
இதற்கிடையே, 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு பிரிவில், இந்திய அணி தரப்பில் ரமிதா-அர்ஜூன் பாபுதா மற்றும் இளவேனில்-சந்தீப்சிங் ஆகிய ஜோடிகள் களம் இறங்கின. இந்த தகுதி சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே பதக்கங்களுக்கான போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், இந்தியாவின் ரமிதா-அர்ஜூன் பாபுதா இணை 6-வது இடத்தையும், இளவேனில்-சந்தீப்சிங் ஜோடி 12-வது இடத்தையும் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.