ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று குறைந்தது!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.05 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது.
கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து, கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், கர்நாடகாவில் மழை அளவு சற்று குறைந்ததால், அம்மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு சற்று குறைந்துள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்தும் குறைந்துள்ளது.
இதன்படி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 1.35 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1.05 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது. இருப்பினும், மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும், ஆற்றில் குளிக்கவும் 19-வது நாளாக தடை விதித்துள்ளது.