லஞ்சப் பணத்தை தவணையாக பெற்ற அதிகாரிகள் - குஜராத்தில் அதிர்ச்சி!
குஜராத்தில் லஞ்சப் பணத்தை மாதத் தவணையில், வழங்க அரசு அதிகாரிகள் ஒப்புக் கொண்ட சம்பவங்கள் தெரியவந்துள்ளது.
குஜராத்தில் கடந்த மார்ச் மாதம் மாநில ஜிஎஸ்டி வரி வருவாய் மோசடி செய்த வழக்கில், ஒரு நபரிடம், அரசு அதிகாரி ஒருவர் ரூ.21 லட்சத்தை லஞ்சமாகக் கேட்டுள்ளார். இந்த தொகையை உடனடியாக தர இயலாத நிலையில், ரூ.2 லட்சத்தை முதல் ஒன்பது தவணைகளிலும், ரூ.1 லட்சத்தை கடைசி தவணையிலும் வழங்க அந்த நபர் ஒப்புக்கொண்டார்.
அதேபோல், சூரத்தில் விவசாயி ஒருவர் விவசாய நிலத்துக்கு அனுமதிச் சான்றிதழ் பெற சென்றுள்ளார். அவரிடம் தாலுகா பஞ்சாத்து உறுப்பினர் ரூ.85 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், அவரிடம் அவ்வளவு பணம் இல்லாத காரணத்தில், அந்த லஞ்சப் பணத்தை 4 தவணைகளில் தர அனுமதிக்கபட்டார். முதல் தவணையில் ரூ.35 ஆயிரத்தையும், அடுத்த மூன்று தவணைகளில் பாக்கி தொகையை தரவும் விவசாயி ஒப்புக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து, காவல்துறையினர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்களிடம் ரூ.10 லட்சம் லஞ்ச பணத்தை நான்கு தவணையாக பெற்றுள்ள சம்பவமும் தெரியவந்துள்ளது. அதேபோல் அதிகாரிகள் ரூ.10 லட்சம் லஞ்ச பணத்தை நான்கு தவணைகளில் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக ஊழல் தடுப்பு அதிகாரிகள் கூறுகையில், "இந்த ஆண்டு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுவரை 10 வழக்குகள் பதிவாகியுள்ளன" என்றனர். இது போன்ற சம்பவங்கள் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.