சமூக ஆர்வலர் ஜகபர் அலி புகார் கூறிய குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு!
சட்ட விரோத கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜகபர் அலி மினி லாரி ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் கவுன்சிலரும், சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக தொடர்ச்சியாக வழக்குத் தொடர்ந்து போராடிய சமூக ஆர்வலரான ஜகபர் அலி கொலை வழக்கில், கல்குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் துளையானூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள கல் குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ள 4 மாவட்டங்களை சேர்ந்த கனிமவளத்துறை அதிகாரிகள் இன்று (ஜன. 21) காலை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்பகுதியில் டிரோன் மூலம் கண்காணிப்பு பணியில் கனிமவளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கின் பின்னணி என்ன?
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் கவுன்சிலரும், மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் தலைவருமான ஜகபர் அலி (58). மேலும் இவர் திருமயம் தெற்கு ஒன்றிய அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளராகவும் இருந்து வந்துள்ளார்.
இவர் காட்டுபாவா பள்ளிவாசல் அருகே வசித்து வந்துள்ளார். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரில் உள்ளனர். இவர் மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.17) அன்று மதியம் தொழுகைக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது எதிரே வந்த 407 மினி டிப்பர் லாரி அவர் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகி, ஜகபர் அலி இறந்து விட்டதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருமயம் காவல்துறையினர், விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் ஜகபர் அலி உடலை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் ஜகபர் அலி உயிரிழந்ததை அறிந்த 50க்கும் மேற்பட்ட அவரது உறவினர்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். ஜகபர் அலி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், திருமயம் சுற்று வட்டார பகுதியில் சட்டவிரோதமாக அதிக கற்களை வெட்டி எடுக்கும் குவாரிகள் மீது பல்வேறு வழக்குகளை தொடர்ந்து போராடி வந்ததால் அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் எனக்கூறி, உடலை வாங்க மறுத்தனர்.
இதனையடுத்து ஜகபர் அலியின் மனைவி மரியம் திருமயம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், திருமயம் அருகே உள்ள துளையானூர் வளையன்வயல் கிராமத்தைச் சேர்ந்த ஆர்ஆர் நிறுவனங்களின் உரிமையாளர்களான ராசு மற்றும் ராமையா ஆகியோர், கனிமவள கொள்ளையில் ஈடுபடுவதை தடுப்பதற்கு ஜகபர் அலி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், பல்வேறு கட்ட நடவடிக்கையில் அலி தொடர்ந்து இதுபோல் செயல்பட்டால் லாரியை ஏற்றி கொன்று விட்டு, விபத்து நடந்தது போல் காட்டி விடுவோம் என்று மிரட்டி வந்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால் அதனை பொருட்படுத்தாமல் தனது கணவர் ஜகபர் அலி தொடர்ந்து கனிமவள கொள்ளைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து தொடர்ந்து புகார் அளித்து வந்ததால் ஆத்திரமடைந்த ராசு மற்றும் ராமையா ஆகிய இருவர், மினி லாரி வைத்துள்ள இவர்களது நண்பரான
முருகானந்தம் உதவியுடன் சதி திட்டம் தீட்டி, அவரை கொன்றுவிட்டதாக புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் சதீஷ், 407 மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், அந்த லாரியைஓட்டி வந்த ஓட்டுநர் காசி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து ஜகபர் அலி கனிம வளக்கொள்ளை குறித்து புகார் அளித்தும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததன் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.