கூட்டணிப் பேச்சுவார்த்தை: 7 பேர் குழுவை அமைத்தார் ஓ.பன்னீர்செல்வம்!
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மக்களவை பொதுத் தேர்தலில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு அமைத்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2024-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த கீழ்க்காணும் குழு அமைக்கப்படுகிறது.
அதில் சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜேசிடி பிரபாகர், சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன், எம்.பி.தர்மர், புகழேந்தி, மருது அழகராஜ் உள்ளிட்ட ஏழு பேர் இடம் பெற்றுள்ளனர்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் சென்னை மயிலாப்பூர், 72-75 டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் உள்ள கூட்ட அரங்கில் நாளை (மார்ச் 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பத்தாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் நாளை 6:00 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.