ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-4 தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை!
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-4 தேர்வை 265 தேர்வு மையங்களில் 73,826 மாணவர்கள் எழுத உள்ளார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் தகவல்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-4 (குரூப்-4) தேர்வு நாளை (12.07.2025 <12072025>) நடைபெறவுள்ளது. கள்ளிக்குடி வட்டத்தில் 4 தேர்வு மையங்களில் 1049 மாணவர்களும், மதுரை கிழக்கு வட்டத்தில் 15 தேர்வு மையங்களில் 4379 மாணவர்களும், மதுரை வடக்கு வட்டத்தில் 68 தேர்வு மையங்களில் 19177 மாணவர்களும், மதுரை தெற்கு வட்டத்தில் 46 தேர்வு மையங்களில் 13152 மாணவர்களும், மதுரை மேற்கு வட்டத்தில் 17 தேர்வு மையங்களில் 4312 மாணவர்களும், மேலூர் வட்டத்தில் 20 தேர்வு மையங்களில் 5731 மாணவர்களும், பேரையூர் வட்டத்தில் 13 தேர்வு மையங்களில் 3840 மாணவர்களும், திருமங்கலம் வட்டத்தில் 22 தேர்வு மையங்களில் 6181 மாணவர்களும், திருப்பரங்குன்றம் வட்டத்தில் 18 தேர்வு மையங்களில் 5560 மாணவர்களும், உசிலம்பட்டி வட்டத்தில் 23 தேர்வு மையங்களில் 5612 மாணவர்களும், வாடிப்பட்டி வட்டத்தில் 19 தேர்வு மையங்களில் 4833 மாணவர்களும் என மொத்தம் 265 தேர்வு மையங்களில் 73,826 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளார்கள்.
வினாத்தாள் மற்றும் விடைத்தாள் (OMR SHEET) உட்பட தேர்வாணையத்தின் பொருட்கள் அனைத்தும் 11 மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்களில் மிக பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
தேர்வு நாளன்று கருவூலங்களிலிருந்து ஆயுதம் ஏந்திய பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்காக, துணை வட்டாட்சியர் நிலை அலுவலர் தலைமையில் 72 நகரும் குழுக்களும் (Moblie Unit), துணை ஆட்சியர்கள் தலைமையில் 11 பறக்கும் படைகளும் (Flying Squad) அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.