நவ. 25 முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்? | ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசிடம் அளித்த அறிக்கையில் மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. அதைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் 100 தினங்களில் தேர்தலை நடத்த வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்திருந்தது. இதை அமல்படுத்த எந்தக் காலக்கெடுவையும் இக்குழு நிர்ணயிக்கவில்லை.
இதை அமல்படுத்த ஒரு செயலாக்கக் குழுவை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு அரசியல் சாசனத்தில் 18 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ராம்நாத் கோவிந்த் குழு தெரிவித்திருந்தது. எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டை கொண்டாடும் விதமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை நவம்பர் 26ம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை தொடக்கத்திலிருந்து காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. கடந்த 1967 வரை இந்திய மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தான் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. மாநில அரசுகள் கலைக்கப்பட்டது, புதிய மாநிலங்கள் உருவானது உள்ளிட்ட காரணங்களால் தேர்தல்களின் சுழற்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. தேர்தலுக்கு ஆகும் செலவு குறையும், ஆளும் கட்சிகள் தேர்தல்களில் கவனம் செலுத்துவது குறைந்து, ஆட்சியிலும் நலத்திட்டங்களிலும் கவனம் செலுத்த முடியும் என்பன போன்ற வாதங்கள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவாக முன்வைக்கப்படுகின்றன.