ராமர் சிலை பிரதிஷ்டையை கண்டித்து உண்ணாவிரதம் - மணிசங்கர் ஐயர் வீட்டை காலி செய்ய நோட்டீஸ்!
ராமர் சிலை பிரதிஷ்டையை கண்டித்து மணி சங்கர் ஐயரின் மகள் சுரன்யா ஐயர் உண்ணாவிரதம் இருந்ததால் அவரது வீட்டை காலி செய்ய குடியிருப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை ஜனவரி 22 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ராமர் சிலை பிரதிஷ்டை விழாவை காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. இதன் ஒருபகுதியாக காங்கிரஸ் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான மணி சங்கர் ஐயரின் மகளான சுரன்யா ஐயர் தனது சமூக வலைதள பக்கத்தில் “ ராமர் சிலை பிரதிஷ்டையை கண்டித்து பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்காக 3 நாட்கள் உண்ணா விரதம் இருக்கப் போகிறேன். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இந்த உண்ணா விரதம் இருக்க போகிறேன்” என அறிவித்தார்.
சுரன்யா ஐயரின் பதிவுக்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து மணி சங்கர் ஐயர் குடியிருக்கும் பகுதியான டெல்லி ஜங்புரா விரிவாக்க நலச் சங்க குடியிருப்பில் இருந்து உடனே அவர் வெளியேற வேண்டும் என அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்களின் பொது அமைதியைக் குலைக்கும் விதமாகவும் அவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகவும் செயல்பட்டுள்ளதால் உடனே வீட்டை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி ஜங்புரா விரிவாக்க நலச் சங்கத்தின் குடியிருப்பில் இருந்து மணி சங்கர் ஐயரை வெளியேறச் சொன்ன விவகாரத்தில் ஆதரவான மற்றும் எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சுரன்யா ஐயருக்கு எதிராக செயல்பட்ட குடியிருப்பாளர் சங்கத்தின் தலைவருக்கு எதிராக அந்த சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் பலரும் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.