"தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல... இந்தியாவின் ஆன்மா சம்மந்தப்பட்ட விவகாரம்” - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு
சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியதாவது,
"தொகுதி மறுவரையறை என்பது எண்ணிக்கை மட்டுமல்ல, இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு அர்த்தமுள்ள உரையாடல் மேற்கொள்ள வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.
தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறைவது பாஜகவின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும். பாதிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே மத்திய அரசு நிதிகளை தராமல் நம்மை தண்டித்துள்ளது. மாநிலங்களின் ஒன்றியமே இந்திய நாடு. பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம்"
இவ்வாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.