“ஹேப்பியா இல்லை என்றால் ஊழியர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை!” சீன நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!
சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு அன்ஹாப்பி லீவ் என்ற ஒரு புதிய விடுமுறையை அறிமுகம் செய்து ஊழியர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அண்மை காலமாகவே வேலைக்கு செல்லக்கூடிய ஊழியர்கள் வேலைக்காக எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறார்களோ, அதே போல அவர்களது குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து சமமான அளவில் நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனமான lat Dong Lai தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சோகமாக இருக்கும் நாள்களில் வருடத்தில் 10 நாட்கள் வரை கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : “காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்!” – மே தினத்தை ஒட்டி தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் தான் வேலை நேரமாகும். மேலும், 30 முதல் 40 நாட்கள் வரை ஆண்டுதோறும் விடுப்பு வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் ஊழியர்களின் சராசரி மாதச் சம்பளம் 7,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 80,878) ஆகும்.
இது தொடர்பாக நிறுவனர் யூ டோங் லாய் கூறியதாவது :
" எல்லோருக்கும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லாத நாட்கள் உள்ளன. எனவே நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், வேலைக்கு வர வேண்டாம். இந்த மாற்றத்தின் மூலம், ஊழியர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தை தீர்மானிக்க சுதந்திரமாக இருப்பார்கள். இந்த விடுப்பை நிர்வாகத்தால் மறுக்க முடியாது"
இவ்வாறு நிறுவனர் யூ டோங் லாய் கூறியுள்ளார்.
பாங் டாங் லாய் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பலர் இந்த நிறுவனத்தில் வேலை கிடைக்குமா என முயற்சி செய்து வருகிறார்களாம்.