“பாலியல் குற்றச்சாட்டுகளில் பெண்கள் சொல்வது எல்லாமே உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை” - கேரள உயர் நீதிமன்றம்!
பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட குற்றவியல் வழக்குகளில், புகார்தாரர் பெண் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பெண் ஊழியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
புகார்தாரரின் குற்றச்சாட்டுகளுடன் மட்டும் நின்றுவிடாமல், காவல்துறையின் விசாரணைகள் விரிவானதாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
கேரளாவில் பெண் ஒருவர் தான் பணியாற்றிய இடத்தில் தனது கையை தவறான நோக்கத்துடன் பிடித்ததாக தனது மேலாளர் மீது புகாரளித்திருந்தார். ஆனால் அதற்கு முன்னரே குற்றம் சாட்டியுள்ள பெண் தன்னை திட்டி, மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர் போலீசில் புகார் அளித்திருந்தார். மேலும் அதற்கு ஆதாரமாக ஆடியோ ஒன்றையும் போலீசிடம் வழங்கியிருந்தார்.
வேலையில் சரியாக இல்லாததால் பணிநீக்கம் செய்ததாகவும், அதற்காக அந்தப் பெண் தன்னை திட்டி மிரட்டியதாகவும், இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் தெரிவித்தார். மேலும் தனது எதிர் புகாரை போலீசார் விசாரிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டவர் தெரிவித்தார். இதனைக்கேட்ட நீதிபதி, புகார்தாரர் ஒரு பெண் என்பதால், அவர் சொல்வது அனைத்தும் உண்மை என்று கூறமுடியாது. அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என தெரிவித்தார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கை கருத்தில்கொள்ளாமல் அறிக்கையின் அடிப்படையில் விசாரணையை தொடர நீதிபதி உத்தரவிட்டார். பொய்யான குற்றச்சாட்டுகள் ஒரு நபரின் நேர்மை, நற்பெயர் மற்றும் சமூக அந்தஸ்தை சரிசெய்ய முடியாத அளவுக்கு சேதப்படுத்தும் என்றும், இதனை பணத்தால் சரிசெய்ய முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார். சட்ட அமலாக்க நிறுவனங்கள் விழிப்புடன் இருக்கவும், விசாரணைகளின் போது உண்மை நிறுவப்படுவதை உறுதி செய்யவும், தவறான வழக்குகளைத் தடுக்கவும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
விசாரணை அதிகாரி (10) பென்டிரைவை ஆய்வு செய்து அதற்கேற்றவாறு வழக்கை கையாள வேண்டும் என நீதிபதி குன்ஹிகிருஷ்ணன் தீர்ப்பளித்தார். மேலும், பெண்ணின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனக் கண்டறியப்பட்டால், “சட்டப்படி, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும் அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.