“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதி மறுக்கப்படுகிறது” - திருச்சி சிவா குற்றச்சாட்டு!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ஒருவருக்கு கூட பேசுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என திருச்சி சிவா எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரின் முதல் நாளிலிருந்தே அதானி ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இந்த கோரிக்கையை எதிர்க்கட்சி எம்பிக்கள் முன்வைத்து அமளியில் ஈடுபடுவதும், பின்னர் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதும் வழக்கமாகி வருகிறது. இந்த அதானி விவகாரத்தால் மக்களின் பிரச்னைகள் பேசப்படாமல் இருந்து வருகின்றன.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி வழங்கப்படுவதில்லை என எம்பி திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமையே. ஆளுங்கட்சியினர் அவர்கள் நினைப்பதையே செய்ய முயற்சித்து வருகின்றனர். ஜனநாயக முறை நாடாளுமன்றத்தில் பின்பற்றப்பட வேண்டும். கடந்த சில தினங்களாக அவையை முடக்க வேண்டும் என ஆளுங்கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். அதானி விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தும், அவை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியினர் பேச அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இருக்கத் தகுதியற்றவர்கள் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கூறுகிறார். நேற்று காந்தியை பெயர் குறிப்பிட்டு பேசினர்; இன்று சோனியா காந்தியை ஜெபி. நட்டா பேசுகிறார். அனைவருக்கும் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. தேவகவுடா பேசினார். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பேசினார். நட்டாவும் பேசினார்.
ஆனால், எதிர்க்கட்சிகள் ஒருவருக்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை. அவர்கள் பேசுவது மட்டும் தான் அவைக் குறிப்பில் ஏறுகிறது. வரலாற்றில் அவை மட்டுமே பதிவாகிறது. ஜனநாயக அடிப்படையிலே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் வெற்றி, தோல்வி பற்றி தற்போது கவலைப்பட தேவையில்லை” என தெரிவித்தார்.