இன்று முதல் கோயம்பேட்டிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ஒரு பேருந்து கூட இயக்கப்படாது...!
இன்று முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஒரு பேருந்து கூட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மூடப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்த நிலையில், இன்று அதிகாலை முதலே தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரும்பிய ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்பட்டன. சென்னை நகருக்குள் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளை ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், சென்னை நகருக்குள் எந்த ஆம்னி பேருந்துகளும் பயணிகளை ஏற்றி செல்லக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, போதிய வசதிகள் இல்லாததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து, “ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்றார் போல் அரசு செயல்பட முடியாது. மக்களுடைய தேவைக்கு, விருப்பத்திற்கு ஏற்றாற் போல தான் அரசு செயல்பட முடியும்.
ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கவில்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்” என்று அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதால், வழக்கத்தை விட அதிகமானோர் நேற்று மாலை முதலே கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 7 மணி முதலே தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அனுமதிக்க மறுத்தனர்.
பேருந்து நிலையத்தில் குழுமியிருந்த பயணிகளை, கிளாம்பாக்கம் சென்று பேருந்தில் ஏறிக் கொள்ளும்படி அறிவுறுத்தினர். அதிகப்படியான லக்கேஜ்களுடன் குடும்பமாக குழந்தைகளுடன் வந்திருந்த பயணிகள், நேற்று கடும் சிரமத்திற்குள்ளாகி, சி.எம்.டி.ஏ அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.
பயணிகள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குழுமியிருந்த பயணிகள், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு, மாநகர பேருந்துகள் மூலமாக இலவசமாக அழைத்து செல்லப்பட்டனர்.