ATM வாசலில் மிதந்த இளைஞர் உடல் - மழையில் பணம் எடுக்கச் சென்றபோது நேர்ந்த பரிதாபம்!
சென்னையில் ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கச் சென்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. காற்றின் காரணமாக மின்சார கம்பிகள் ஆங்காங்கே அறுந்து கிடக்கின்றன. இதனால் மின்சாரம் பாயும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மழையின் போது வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் சென்னை பிராட்வே அருகே உள்ள முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம்.இல் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சாந்தன் என்பவர் பணம் எடுக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் ஏ.டி.எம் நிலையத்தில் உள்ள இரும்பு படிக்கட்டு கம்பியைப் பிடித்ததாகச் சொல்லப்படுகிறது. அதிலிருந்து அவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் சாந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.டி.எம். இல் பணம் எடுக்கச் சென்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.