வெளுக்கப்போகும் வடகிழக்கு பருவமழை... சொந்தமாக 36 படகுகளை வாங்கிய #GreaterChennai Corporation!
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக, 36 சிறிய வகை படகுகளை சென்னை மாநகராட்சி சொந்தமாக வாங்கியுள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமாகவே இருந்தது. இதனைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழை இம்முறை வடதமிழகத்தில் இயல்பைவிட அதிகமாகவும், தென்தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றாம் வாரத்தில் இருந்து தொடங்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையொட்டி சென்னை முழுவதும் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைந்த முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 36 சிறிய வகை படகுகளை சென்னை மாநகராட்சி சொந்தமாக வாங்கியுள்ளது.
முதல் கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பெருங்குடி பகுதிக்கு 2 படகுகளும், மாதவரம் பகுதிக்கு ஒரு படகும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, மீனவர்களிடம் இருந்து 80 படகுகள் வாடகைக்கு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.