For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தனியார் மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் அபராதம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

03:49 PM Feb 27, 2024 IST | Web Editor
தனியார் மருத்துவமனைக்கு ரூ 25 லட்சம் அபராதம்   உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Advertisement

ஒலிமாசு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சென்னை ஆழ்வார்பேட்டை செயிண்ட் மேரீஸ் சாலையில் தனியார் மருத்துவமனை நிர்வாகம், 10 அடுக்கில் புதிய மருத்துவமனை அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கட்டுமான பணிகள் இரவு நேரங்களில் நடப்பதால் சுற்றுப்புற பகுதியில் அதிக அளவில் ஒலி மாசு ஏற்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை எனவும், உரிய கட்டணம் செலுத்தும்பட்சத்தில் திட்ட அனுமதி வழங்கப்படும் என சிஎம்டிஏ தரப்பில் தெரிவிக்கபட்டிருந்தது. இதையடுத்து, எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தொடர்வதற்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது, தொடர்ந்து கட்டுமான பணிகள் நடைபெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதித்ததன் மூலம் கடமை தவறி விட்டதாக அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றிற்கு தலா ரூ.5 லட்சம், தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்திற்கு ரூ.2 லட்சம், எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

இந்த அபராத தொகை 37 லட்ச ரூபாயை அடையார் புற்றுநோய் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். திட்ட அனுமதியை பின்பற்றி, கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், மருத்துவமனையின் கட்டுமான பணிகள் குறித்து, சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி, மாசு கட்டுபாட்டு வாரியம் ஆகியவை 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Tags :
Advertisement