தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி - அதிமுகவின் நிலைப்பாடு என்ன?
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி வழங்க முடியாது என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி குறித்து அனைத்து கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதையும் படியுங்கள் : மக்களவைத் தேர்தல் 2024 – தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது பாஜக!
நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக-வுடன் அதிமுக கூட்டணி வைக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஒரு வாரத்திற்கு முன் அதிமுக நிர்வாகிகள் , பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து கூட்டணி குறித்து பேசியதாக தகவல் வெளியானது.
தேமுதிகவினர் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதிமுக-வினர் ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிக தனக்கு சாதகமான தொகுதிகள் என தேர்வு செய்துள்ள 7 தொகுதிகளில் 3 தொகுதிகள் வரை ஒதுக்க தயாராக இருப்பதாகவும் அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு பதிலாக கூடுதலாக 1 நாடாளுமன்ற தொகுதி கூட ஒதுக்கீடு செய்வதாக தேமுதிகவிடம் அதிமுக தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மதுரை, விருதுநகர், கள்ளக்குறிச்சி என சாதகமான தொகுதிகளை பட்டியலிட்ட தேமுதிகவுக்கு மதுரையை வழங்குவது கடினம் எனவும் கள்ளக்குறிச்சி மற்றும் விருதுநகர் தொகுதியை ஒதுக்க தயாராக இருப்பதாகவும் அதிமுக தரப்பில் கூறியதாக தெரிகிறது.