"காமராஜர் குறித்துப் பேச யாருக்கும் தகுதி இல்லை" - அண்ணாமலை!
தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மக்கள் தலைவர்களை எல்லாம் தரக்குறைவாகப் பேசி அவமதித்த, அசிங்கமான வரலாறுகள் நிறைந்த திமுக, பெருந்தலைவர் காமராஜரை அவமானப்படுத்த முயற்சிப்பதில் ஆச்சரியமில்லை.
காமராஜர் வாழும்போதே அவரை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததை நாடறியும். தற்போது அப்படிப் பேசினால், பொதுமக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்பதால், திருச்சி சிவா, கருணாநிதியைப் புனிதப்படுத்த முயற்சிக்கிறார்.
பொய்களையும், புரட்டுகளையும், வெறுப்புணர்வையும் தூண்டி வளர்ந்த கட்சிதான் திமுக. அத்தனை புரட்டுகளுக்கும் ஆதாரமாக, நெஞ்சுக்கு நீதியைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். உண்மை என்னவென்றால், அந்த நெஞ்சுக்கு நீதியை திமுக கட்சிக்காரர்கள் ஒருவர் கூட படித்ததில்லை. குறிப்பாக, நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பதை, அவரது மகனான, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே படித்ததில்லை என்பது பலமுறை வெளிப்படையாகத் தெரிந்த உண்மை.
தனது இறுதி மூச்சு வரை, மக்களுக்காகவே வாழ்ந்த கர்மவீரர் காமராஜர் குறித்துப் பேச, எந்தத் தகுதியும் இல்லை". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.