“யார் பிரச்சாரம் செய்தாலும், பாஜகவுக்கு டெபாசிட் கிடைக்காது” - ஜி.ராமகிருஷ்ணன் விமர்சனம்
தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் பாஜகவுக்கு டெபாசிட் கிடைக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் மார்க்கெட் பகுதியில் வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஜி.ராமகிருஷ்ணன் உரையாற்றியதாவது :
“இந்த மக்களவை தேர்தல் இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் தேர்தல் இல்லை. ஜனநாயகமா சர்வாதிகாரமா, மதச்சார்பின்மையா மதவெறியா, கூட்டாட்சியா தனிக்கட்சி சர்வாதிகாரமா என்று நிரூபிக்கும் தேர்தல். பாஜகவை தோற்கடிப்பது மட்டுமல்லாமல், அதிமுகவை தோற்படிப்பது மட்டுமல்லாமல், கலாநிதி வீராசாமியை வெற்றி பெறச் செய்து மத்தியில் I.N.D.I.A. கூட்டணி ஆட்சி உருவாக வேண்டும்.
ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம் என்று 2014-ம் ஆண்டு மோடி சொன்னார். பத்தாண்டு காலமாக ஊழல் ஒழிக்கப்பட்டதா? உலக மகா ஊழலாக பாஜக விளங்குகிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று சொன்ன மோடி, 10 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு வேலை கொடுத்துவிட்டாரா?” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.ராமகிருஷ்ணன்,
“தமிழ்நாடு முழுவதும் 2019 மக்களவை தேர்தலில், 38 இடங்களில் வெற்றி பெற்று தேனியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். நடைபெறக் கூடிய 18-வது மக்களவை தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெறும். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா போன்ற தென்மாநிலங்களில் மட்டுமல்லாமல், இந்தி பேசக்கூடிய வடமாநிலங்களிலும் பாஜக தோற்பது உறுதி.
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகிய இருவரை கைது செய்து வைத்திருக்கிறார்கள். கெஜ்ரிவால் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைத்திருக்கின்றனர்.
அதே நேரத்தில் அந்த பிரச்னையில் சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் இயக்குநர் சரத் சந்த் ரெட்டி கைது செய்யப்பட்டு, ஐந்து கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அவர் விடுதலையாகி வெளியே வந்தபொழுது அவர் மீது அமலாக்கத்துறை எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அவர் பாஜகவுக்கு ரூ.59 கோடி நிதியை தேர்தல் பத்திரமாக கொடுத்துள்ளார். உண்மையிலேயே சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கைது செய்யப்பட வேண்டுமானால், சரத் சந்த் ரெட்டி தான் கைது செய்யப்பட வேண்டும்.
தேர்தல் பத்திரத்தை உச்சநீதிமன்றம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று
ரத்து செய்ய வேண்டும். அந்த விவரங்களை அளிக்க வேண்டும். ஒட்டுமொத்தத்தில் தேர்தல்
பத்திரம் உலக மகா ஊழல். அந்த உலக மகா ஊழலில் பாஜக சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் ஊழலை ஒழிப்போம் என்று கூறிய பாஜக, உண்மையிலேயே இந்திய
சுதந்திர வரலாற்றில் 76 ஆண்டுகளில் காணாத மகா ஊழலில் சிக்கியிருக்கிறது.
வடமாநிலங்களில் பாஜக வீழ்த்தப்பட்டு I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமையக்கூடிய நல்லசூழல் உருவாக்கி இருக்கிறது. இந்தியா முழுவதும் தேர்தல் பத்திரத்தின் விவரங்கள் வெளிவந்த பிறகு உலக மகா ஊழல் பாஜக செய்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. அவர்கள் மீண்டும் வெற்றி பெற முடியாது. பாஜகவிற்கு குறைந்தபட்சமாக 200 சீட் கூட கிடைக்காது.
நீட்டுக்கு விலக்கு அளிக்காத பாஜக அரசுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் யார் பிரச்சாரம் செய்தாலும், பாஜக போட்டியிடும் தொகுதிகளில் டெபாசிட் கூட கிடைக்காது. I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது, நீட் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு குறித்து பேசியபோது, அது சம்பந்தமாக கேள்வி கேட்டபோது அந்தப் பிரச்னை குறித்து பேச வேண்டாம், முடிந்துவிட்டது என்று திசைதிருப்பிய பாஜக அரசு, அதனை இப்பொழுது ஏன் பேசுகிறது?”
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.