எவ்வளவு முயற்சி செய்தாலும் 50 இடங்களில்கூட காங். வெற்றி பெறாது - பிரதமர் மோடி விமர்சனம்!
காங்கிரஸ் கட்சி எவ்வளவு முயற்சி செய்தாலும் மக்களவை தேர்தலில் 50 தொகுதிகளில்கூட வெற்றி பெறாது என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகரில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியதாவது :
“இந்த தேர்தல் நாட்டின் தேர்தல். ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு அரசை தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பு. நாடு முழுவதும் 15 இடங்களில் கூட திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் எவ்வளவு முயற்சி செய்தாலும் 50 இடங்களைக்கூட பெறுவது கடினம். இந்தியாவில் ஆட்சி அமைத்தால், அது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியாக தான் இருக்கும் என்பது இந்த தேர்தலில் தெளிவாக தெரிகிறது. இப்போது உள்ள ஒரே கேள்வி தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளை தாண்டுமா என்பதுதான். மக்களவையில் எதிர்க்கட்சிகளில் யார் பெரிய கட்சியாக மாறுவது என்பதுதான் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளுக்கிடையே தற்போது உள்ள போட்டி.நாட்டின் ஒவ்வொரு பகுதியும் வளர்ச்சி அடைய பொதுமக்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். மேற்கு வங்க மாநில மக்கள் மீண்டும் மோடி அரசு வர வேண்டும் என விரும்புகிறார்கள். இன்று நாட்டின் உள்கட்டமைப்பு, கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்கள் தொடர்பாக வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. NDA கூட்டணி வெற்றி பெற்றால் வளர்ச்சிப் பணிகள் மேலும் வேகமாக நடைபெறும்.
இதையும் படியுங்கள் : அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து வழக்கு - ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!
காங்கிரஸ் கட்சி மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்துகிறது. எல்லையின் மறுபுறத்தில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களின் தவறு என்ன? அப்படிப்பட்ட ஒவ்வொருவரின் துன்பத்தையும் போக்க குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.