"தமிழ்நாட்டில் #Dengue பாதிப்பால் உயிரிழப்பு அதிகரிக்கவில்லை" - பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் விளக்கம்!
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு அதிகரிக்கவில்லை என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் ஆங்காங்கே பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர். டெங்கு பரவலை தடுக்க தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.
இதையும் படியுங்கள் :அஜித் தோவல் ரஷ்யா சென்றது ஏன்? மத்திய அமைச்சர் #SJaishankar அளித்த அப்டேட்!
அப்போது அவர் கூறியதாவது :
"தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை 11,538 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டதுமே மருத்துவமனையை நாடாமல் பாதிப்பு தீவிரமடைந்த பிறகு மருத்துவமனைக்கு வந்ததால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டது.
இன்று டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் தகவல் தவறானது. ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பு ஏற்பட்ட தகவலை தற்போது புதிதாக பாதிப்பு ஏற்பட்டது போன்ற பரப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை ஐந்து நபர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.