"சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்காத மத்திய அரசு" - தயாநிதி மாறன் கேள்வியால் வெளியான அதிர்ச்சித் தகவல்!
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை எந்தவித நிதியும் ஒதுக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
மக்களவையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அதன் விவரம் வருமாறு:
- சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்காக தற்போது வரை ஒதுக்கிய நிதி மற்றும் அனுமதி விவரம் என்ன?
- சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏன்?
- இந்த திட்டத்திற்கு கடந்த 3 ஆண்டுகளாக ஒப்புதல் கொடுக்காமல் நிலுவையில் வைத்திருப்பது ஏன்?
- இந்த திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கைக்கு ஒன்றிய அரசு எடுத்த முடிவு என்ன?
- கடந்த 5 ஆண்டுகளாக நாடு முழுவதும் நடக்கும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மாநிலம் மற்றும் நகரம் வாரியாக ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதிவிவரங்களை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் தோகன் சாகு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது,
"சென்னையில் 118.9 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பாதை அமைக்க ரூ.63,246 கோடி மதிப்பிலான திட்டத்தை தமிழ்நாடு அரசு தயாரித்து அனுப்பி வைத்தது. மிகவும் அதிக மதிப்பு கொண்ட இந்த திட்டத்தை செயல்படுத்தும் சாத்தியம் மற்றும் அதற்கு தேவையான வளங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டது. தற்போது சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் அனைத்தும் மாநில திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான அனைத்து நிதியையும் தமிழ்நாடு அரசு தான் வழங்கி வருகிறது. நாடு முழுவதும் தற்போது 12 மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. நாக்பூர் 2ம் கட்ட பணிகளுக்கு 2022 டிசம்பர் மாதமும், புனே திட்டத்திற்கு 2023 அக்டோபரிலும், கான்பூர் மெட்ரோவுக்கு 2019 மே மாதமும், ஆக்ரா திட்டத்திற்கு 2019 மே மாதமும், கொச்சி முதல்பாதை விரிவாக்க திட்டத்திற்கு 2023 பிப்ரவரியிலும், கொச்சி 2ம் கட்ட பாதைக்கு 2022 நவம்பரிலும்,
பெங்களூரு மெட்ரோ ரயில் 2ம்கட்டபாதை பணிகளுக்கு 2021 ஜூன் மாதமும், டெல்லி மெட்ரோ 4ம் கட்ட பாதை திட்டத்திற்கு 2019 ஜூலையிலும், குருகிராம் திட்டத்திற்கு 2023 ஜூலையிலும், டெல்லி மெட்ரோ 4ம் கட்ட பாதையில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு 2024 மார்ச் மாதமும், அகமதாபாத் இரண்டாம் கட்ட பாதை பணிகளுக்கு 2019 ஜூன் மாதமும், சூரத் மெட்ரோ திட்டத்திற்கு 2019 ஜூன் மாதமும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதில் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு இதுவரை மத்திய அரசு எந்தவித நிதியும் ஒதுக்கவில்லை. அதே சமயம் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2,596 கோடியும், சூரத் திட்டத்திற்கு ரூ.3961 கோடியும் என மொத்தம் ரூ.6558 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. உபி-யில் கான்பூர் திட்டத்திற்கு ரூ.2629 கோடி, ஆக்ரா திட்டத்திற்கு ரூ.1913 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.