சாக்குப்போக்குகள் வேண்டாம்.. வெளிப்படைத்தன்மை தேவை - தேர்தல் ஆணையருக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 7 ஆம் தேதி டெல்லியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அதில், அவர், கடந்த மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜக அரசு தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினர். அத்துடன் கர்நாடக வாக்காளர் பட்டியலில் முறைகேடு தொடர்பாக சில‘ஆதாரங்களையும்’ அவர், வெளியிட்டாா்.
இந்த இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,“கடந்த சில நாள்களுக்கு முன், பல வாக்காளர்களின் புகைப்படங்கள் ஊடகத்துக்கு காட்டப்பட்டன. இவையனைத்தும் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டுள்ளது. அந்த வாக்காளர்கள் மீது சில குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. வாக்காளர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. எந்தவொரு வாக்காளரின் சிசிடிவி காட்சியையாவது தேர்தல் ஆணையம் பகிர வேண்டுமா? வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர்கள் இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே வாக்கு செலுத்தி ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் வாக்கு திருட்டு பற்றிய விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
”நீங்கள் அந்த சிசிடிவி கேமராக்களை வைக்குறதுக்கு முன்னாடி பெண்களிடம் அனுமதி வாங்கியிருக்கீங்களா? வாக்குச்சாவடி என்பது உடை மாற்றும் அறை இல்லை. உங்க வசதியான சாக்குப்போக்குகள் மீது எங்களுக்கு ஆர்வம் இல்லை. எங்களுக்கு வெளிப்படைத்தன்மை தேவை" என்று பதிவிட்டு உள்ளார்.