For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நெல்லை மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

12:08 PM Jan 12, 2024 IST | Web Editor
நெல்லை மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி   மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
Advertisement

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் எந்த மாமன்ற உறுப்பினரும் பங்கேற்காததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் அறிவித்துள்ளார். 

Advertisement

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. இதில் 44 வார்டுகளில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளை சார்ந்த 7 உறுப்பினர்கள் உள்ள நிலையில் அதிமுக சார்பில் 4 பேர் மாமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். மேயராக சரவணனும், துணை மேயராக ராஜுவும் செயல்பட்டு வருகின்றனர்.  இதனிடயே மேயர் சரவணனுக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் போக்கு மாமன்ற கூட்டங்களிலும் எதிரொலித்தது.

கடந்த டிசம்பர் 6-ம் தேதி மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லை என 38 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவிற்கு கடிதம் அனுப்பினர். அனைத்து கையெழுத்தும் சரிபார்க்கப்பட்டு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று (ஜன. 12) நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் அனைத்து உறுப்பினர்களுக்கும் தனித்தனியே கடந்த டிச. 27-ம் தேதி கடிதம் அனுப்பினார்.

இதையும் படியுங்கள் : வெளியானது அயலான் படத்தின் FDFS – “வலி மிகுந்த வெற்றி” என சிவகார்த்திகேயன் உருக்கம்.!

இதனிடையே திருநெல்வேலி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு கடந்த 9 ஆம் தேதி மாமன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் கூட்டத்திற்கு பிறகும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொள்வதாக 30-க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து அதிருப்தி கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் மாவட்ட செயலாளரும் தற்போதைய பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாபிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து அவர்கள் வெவ்வேறு வாகனங்களில் விருதுநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேயர் மற்றும் 3 மாமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாகவும், கவுன்சிலர்கள் ஒரு குழு என 3 குழுக்களாக விருதுநகர் புறப்பட்டு சென்றனர்.

தொடர்ந்து, திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மேயர் சரவணன் மீது கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு சிறப்பு கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமையில் இன்று நடைபெற்றது.

திமுக மாமன்ற உறுப்பினர்கள் (45), தோழமை கட்சி மாமன்ற உறுப்பினர்கள் (6), அதிமுக (4) என மொத்தம் 55 மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்லவில்லை. இந்நிலையில், இதுவரை எந்த மாமன்ற உறுப்பினர்களும் வராத காரணத்தினால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தெரிவித்தார். மேலும்,  அடுத்த இன்றைய தீர்மானம் தோல்வி அடைந்ததால்,  மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அடுத்த ஓராண்டுக்கு கொண்டு வர முடியாது என்றும் அவர் அறிவித்தார். 

Tags :
Advertisement