“வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை” - சர்வதேச மல்யுத்த சங்கம் திட்டவட்டம்!
ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை என சர்வதேச மல்யுத்த சங்கத்தின் தலைவர் நேனட் லாவோவிக் தெரிவித்துள்ளார்.
33வது ஒலிம்பிக் போட்டியில், நேற்று (ஆக. 7) நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கி, ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனை உள்பட 3 பேரை முறியடித்த வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இன்று இறுதிச்சுற்றில் விளையாட இருந்த நிலையில் வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகம் இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். எனவே இந்த பிரிவில் அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. வெள்ளிப்பதக்கம் யாருக்கும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு இந்திய தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில் சர்வதேச மல்யுத்த சங்கத்தின் தலைவர் நேனட் லாவோவிக் பேட்டியளித்துள்ளார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செல்லுபடி ஆகும் எனவும், அவர் ஒருவருக்காக விதிகளை மாற்ற முடியாது எனவும், விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரி தான் எனவும் தெரிவித்துள்ளார். எனவே, தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.