“#Formula4 கார் பந்தயம் நடத்த எந்த தடையும் இல்லை” - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
FIA அனுமதியளிக்கும் பட்சத்தில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்தலாம் என உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து, ஆக. 31 மற்றும் செப். 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிமீ தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றன. மின்விளக்குகள் பொருத்துவது, பொதுமக்கள் போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதை எதிர்த்து தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளர் பி.என்.எஸ். பிரசாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று (ஆக. 28) பட்டியலிடப்படாத நிலையில், இந்த வழக்கை ஆக. 29-ம் தேதி விசாரிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு இந்த வழக்கை ஆக. 29 விசாரிக்க ஒப்புதல் அளித்தது.
அதன்படி, இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை எனவும், FIA அனுமதியளிக்கும் பட்சத்தில் பந்தயம் நடத்தலாம் எனவும் பொறுப்பு தலைமை நீதிபதி தெரிவித்தார். மேலும், மருத்துவமனைகள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு செல்பவர்கள் உள்ளிட்ட யாரும் போக்குவரத்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வழக்கு 6 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.