“தேர்தல் நேரத்தில் எந்த கைது நடவடிக்கையும் செய்யக்கூடாது” - INDIA கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தில் இந்தியா கூட்டணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.
இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், நேற்று கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை நேற்றிரவு அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், இன்று (மார்ச் 22) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சிபிஐஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் அபிஷேக் மனு சிங்வி, திமுக சார்பில் பி.வில்சன், டிஎம்சி சார்பில் டெரிக் ஓ பிரையன், முகமது நதிமுல் ஹக், ஆம் ஆத்மி சார்பில் சந்தீப் பதக் மற்றும் பங்கஜ் குப்தா, சமாஜ்வாதி கட்சி சார்பில் ஜாவேத் அலி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஜிதேந்திர அவாத் உள்ளிட்டோர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிராகவும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய தலைவர்களை அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் தொடர்ந்து மிரட்டப்படுவதாகவும் புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அபிஷேக் மனு சிங்வி, “தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறையின் கைது தேர்தல் முடிவுகளை மாற்றும் என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளோம். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலமாக எதிர்க்கட்சிகளை தொடர்ந்து மிரட்டி வருவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். தேர்தல் நடைபெறுகின்ற நேரத்தில் எந்த கைது நடவடிக்கையும் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி உள்ளோம். அதுமட்டுமல்லாது பாஜக தேர்தல் ஜனநாயகத்தை கொலை செய்ய முயற்சிக்கிறது” என தெரிவித்தார்.
தொடர்ந்து திமுக எம்பி வில்சன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “எதிர்க்கட்சியில் இருக்கும் அனைவரையும் குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆனால் ஆளும் பாஜக அரசில் ஒரு குற்றவாளி கூட இல்லாதது போல் சித்தரிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் ஒரு நல்ல முடிவு எடுக்கும் என நம்பிக்கையாக உள்ளோம்” என தெரிவித்தார்.