”நிதிஷ் குமார் பச்சோந்தியை விட மோசமாக செயல்படுகிறார்" - ஜெய்ராம் ரமேஷ் தாக்கு.!
”நிதிஷ் குமார் பச்சோந்தியை விட மோசமாக செயல்படுகிறார்" என காங்கிரஸ் பொதுச் செயலாளார்ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பீகார் முதலமைச்சர் பதவியை இன்று நான் ராஜினாமா செய்துவிட்டேன். அமைச்சரவையை கலைக்கவும் ஆளுநரிடம் பரிந்துரைத்துள்ளேன். இந்தியா கூட்டணியில் விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. நான் காயப்படுத்தப்பட்டேன். எனவே, இந்தியா கூட்டணியை விட்டு நான் வெளியேறிவிட்டேன்” என தெரிவித்தார்.
இதனிடையே, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில், கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக மாநில தலைவர் சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக விஜய் குமார் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார்.
பீகாரில் ஆட்சி அமைக்க கோரிக்கை https://t.co/WciCN2SiwX | #CMOBihar | #CMNitishKumar | #JDU | #HAM | #NitishKumar | #Governor | #Bihar | #Politics | #BJP | #INDIAAlliance | #NDA | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/w84WZns1e2
— News7 Tamil (@news7tamil) January 28, 2024
பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை நிதீஷ் குமார் ஆளுநரிடம் வழங்கினார். தொடர்ந்து பீகாரில் ஆட்சி அமைப்பதற்கும் உரிமை கோரியுள்ளார். 243 உறுப்பினா்களைக் கொண்ட பீகாா் சட்டப் பேரவையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவுக்கு உள்ள 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை பீகார் ஆளுநரிடம் நிதீஷ் குமார் வழங்கினார். இன்று மாலையே பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக நிதீஷ் குமார் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் இது குறித்து தெரிவித்ததாவது..
“ நிதிஷ் குமாரின் இந்த அரசியல் நாடகம் மக்கள் கவனத்தை காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்திலிருந்து திசை திருப்ப செய்யப்படும் முயற்சியாகும். காங்கிரஸின் நடைப்பயணத்தைப் பார்த்து பாஜக அஞ்சுகிறது. அதனால்தான் இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றுகிறது.
'பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அரசியல் கூட்டணிகளை அடிக்கடி மாற்றிக்கொள்வதன் மூலம் பச்சோந்திகளை போல நிறம் மாறுகிறார். அவர் பச்சோந்திகளுக்கே கடும் போட்டியாக இருப்பார். பீகார் மக்கள் நிதீஷ் குமாரின் துரோகத்தை ஒரு நாளும் மன்னிக்கமாட்டார்கள் ” என ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.