மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் நிர்மலா சீதாராமன்!
மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனி மெஜாரிட்டியை பெறாவிட்டாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவில் மத்தியில் பாஜக ஆட்சியமைத்துள்ளது. இதனிடையே, கடந்த ஜூன் 9-ம் தேதி டெல்லியில் நடந்த பிரம்மாண்ட விழாவில் நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். தொடர்ந்து, அவரது தலைமையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
நேற்று முன்தினம் (ஜூன் 10) புதிய அமைச்சரவையின் முதல் கூட்டடம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. நிதி, வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் உள்துறை ஆகிய 4 முக்கிய அமைச்சகங்களை பாஜக தன்னிடமே வைத்துக் கொண்டுள்ளது. அமித் ஷா உள்துறை அமைச்சகத்தையும், ராஜ்நாத் சிங் பாதுகாப்பு அமைச்சகத்தையும், நிர்மலா சீதாராமன் நிதியமைச்சகத்தையும், எஸ்.ஜெய்சங்கர் வெளியுறவுத் துறையையும் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் இன்று (ஜூன் 12) பொறுப்பேற்றார். 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்ற போது மத்திய அமைச்சராக அவரது அரசியல் பயணம் தொடங்கியது. 2014 அமைச்சரவையில், அவர் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை இணை அமைச்சராக தனிப்பொறுப்புடனுடம் பின்னர் 2017ல் மத்திய பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார். பின்னர் 2019-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.