#UnionMinister நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியில் நடந்தது என்ன? வானதி சீனிவாசன் விளக்கம்!
அன்னபூர்ணா நிறுவனரை மிரட்டி பணிய வைத்து, மன்னிப்பு கேட்க வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனருமான சீனிவாசன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இதையடுத்து நிர்மலா சீதாராமனை அன்னபூர்னா நிறுவனர் சீனிவாசன் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்கும் வீடியோவும் வைரலானது.
இதற்கு பல கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக நிர்வாகியும், கோவை தெற்குதொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது..
“விஸ்வகர்மா திட்டம் தமிழ்நாடு அரசால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறது. செப்டம்பர் 17 விஸ்வகர்மா ஜெயந்தி அன்று இந்த திட்டத்தை தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி செய்ய வேண்டும். குலத்தொழில் என்ற ரீதியில் இந்த திட்டத்தை ஒரு சிலர் எதிர்க்கின்றனர். தமிழக அரசு அறிவிக்கவில்லை என்றால் பாஜக போராடும். பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள மக்கள் இந்த திட்டத்தினால் பயனடைந்து வருகின்றனர்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தவுடன் அதிகாரிகள், தொழில்துறையினர் குறைகளை கேட்டு, பொது இடத்தில் மத்திய அரசின் திட்டங்களை பற்றி நேரடியாக உரையாடினார். கோவையை சேர்ந்த உணவக சங்கத்தின் கௌரவ தலைவர், அனைவராலும் மதிக்கப்படுகிறார். எனக்கு சகோதரர் போன்றவர். ஜிஎஸ்டி தொடர்பாக பேசுகிறார். மத்திய அமைச்சர் வரும் போது, “எம்எல்ஏ அம்மா ஜிலேபி, சாப்பிடுவார். சண்டை போடுவார் " என சொன்னார். உடனே அந்த இடத்தில் நாங்கள் react செய்யவில்லை. என்னால் நான் உங்கள் கடைக்கு எத்தனை முறை வந்து உள்ளேன், ஜிலேபி சாப்பிட்டு உள்ளேன் என கேட்டு இருக்க முடியும்.
ஆனால் பொது இடம் என்பதால் தவிர்த்துவிட்டேன். அடுத்த நாள் காலை எனக்கு போன் செய்த, அன்னபூர்னா ஹோட்டல் உரிமையாளர் மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொன்னார். ஆனால், காலை மத்திய அமைச்சருக்கு நிகழ்வு இருந்ததால், மதியம் பார்க்கலாம் என்று சொன்னேன். அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் எனக்கு தொடர்ச்சியாக போன் செய்தார். நான் தப்பாக பேசிவிட்டேன். மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்பதற்கு நேரம் கொடுங்கள் என்று கேட்டார். பின்னர் ஹோட்டலுக்கு வந்த சீனிவாசன், நான் பேசியது தவறு. தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டேன்; உங்கள் மனது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
ஜிஎஸ்டி., தொடர்பாக எது சொல்லி இருந்தாலும் நான் பதில் சொல்வேன். ஆனால் பெண்
எம்எல்ஏ., வாடிக்கையாளர் தொடர்பாக நீங்கள் பேசலாமா? முறையா என மத்திய
அமைச்சர் கேட்டார். அதன்பின் என்னிடமும் மன்னிப்பு கேட்டார்” என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.