For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களவை தேர்தலில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போட்டி? மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்!

02:08 PM Feb 27, 2024 IST | Web Editor
மக்களவை தேர்தலில் நிர்மலா சீதாராமன்  ஜெய்சங்கர் போட்டி  மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்
Advertisement

வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மிக முக்கிய துறைகளின் அமைச்சர்களாக இருப்பவர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் எஸ்.ஜெய்சங்கர். இவர்கள் இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் இருவரும் போட்டியிட இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரகலாத் ஜோஷி, “மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரானும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. அவர்கள் கர்நாடகாவில் போட்டியிடுவார்களா அல்லது வேறு மாநிலத்தில் போட்டியிடுவார்களா என்பது இன்னும் முடிவாகவில்லை” என தெரிவித்தார்.

அவர்கள் பெங்களூருவில் போட்டியிட வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பிரகலாத் ஜோஷி, “இன்னும் எதுவும் முடிவாகாத நிலையில் நான் பதிலளிக்க முடியாது. இருவரில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். பாஜக ஒரு தேசிய கட்சி. யார் போட்டியிடுவார் எனக் குறிப்பிட்டு என்னால் சொல்ல முடியாது. யார் எங்கே போட்டியிடுவது என்பதை எங்கள் தலைவர்கள் முடிவு செய்வார்கள்” எனக் கூறினார்.

கடந்த 2008-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த நிர்மலா சீதாராமன், 2014 வரை கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தார். பின்னர், நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2014ல் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட நிர்மலா சீதாராமன், 2016ல் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.  2017 முதல் 2019 வரை பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவி வகித்தார்.

தூதரகப் பணியில் இருந்த எஸ்.ஜெய்சங்கர், 2015ல் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தார். அதன் பின்னர் 2019ல் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றார். குஜராத்தில் இருந்து இவர் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement