Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“எதிரி மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் தமிழ்நாட்டு மக்களை நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்தியுள்ளார்!” - தங்கம் தென்னரசு விமர்சனம்!

09:28 PM Dec 22, 2023 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் கோரிய நிதியைத் தராமல்,  எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் அளித்துள்ள பதில் தமிழ்நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துவதாகும் என நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

டிசம்பர் 4-ஆம் தேதின்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பெய்த மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை அனைவரும் அறிவீர்கள். தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தான் பேராபத்து தவிர்க்கப்பட்டது. புயல் - மழைக்குப் பிந்தைய நிவாரண நடவடிக்கைகள் காரணமாக ஒவ்வொரு பகுதியும் படிப்படியாக மீண்டு வருகிறது. நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கி வருகிறோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் மக்களைக் காக்கும், மீட்கும் பணி தொடர்ந்து கொண்டு வருகிறது. இதுகுறித்து நான் அதிகம் விவரிக்கத் தேவையில்லை. வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் மட்டுமல்ல, ஊடகங்களின் வாயிலாக கடந்த மூன்று வார காலமாக நாட்டு மக்கள் இந்தச் செய்திகளைத்தான் அதிகம் அறிந்து வருகிறார்கள். ஊடகங்களும் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் செய்திகளுக்குத்தான் அதிக முக்கியத்தும் அளித்து காட்சிகளை வெளியிட்டு வருகிறார்கள்.

நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த இந்த பாதிப்புச் செய்தி, இந்தியாவில் ஒரே ஒருவருக்கு மட்டும் தெரியவில்லை. அவர்தான் இந்தியாவின் நிதி அமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன். ஏதோ எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் அளித்துள்ள பதில் தமிழ்நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துவது ஆகும்.

மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கடந்த 19-ஆம் தேதி அன்று விளக்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 20 நிமிடங்கள் முதலமைச்சர் சொன்னது அனைத்தையும் கேட்டுக் கொண்ட பிரதமர், 'இது தொடர்பான கோரிக்கை மனு கொண்டு வந்துள்ளீர்களா?' என்று கேட்டார். ஆம் என்றதும் அதனை வாங்கி வைத்துக் கொண்டார். 'உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருகிறேன். இதை விட எனக்கு வேறு பணி இல்லை' என்று பிரதமர் சொன்னார்.

தமிழ்நாட்டில் டிசம்பர் 4, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் பெய்த மழை என்பது வரலாறு காணாதது ஆகும். 50 ஆண்டுகள் கழித்து பெய்கிறது, 100 ஆண்டுகள் கழித்து பெய்கிறது என்று சொல்லத் தக்க மழையளவு ஆகும். எனவே தான் அது ஏற்படுத்திய பாதிப்பு என்பது மிகமிக அதிகமானது. இதனை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை வைத்தார்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத்தொகையாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத்தொகையாக 12,659 கோடி ரூபாயும் முதலமைச்சர் கோரி உள்ளார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக அளவிடப்படவில்லை. எனவே, அவசர நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி தரவேண்டும் என்றும் முதலமைச்சர் பிரதமரிடம் கோரியுள்ளார்கள். ஆக மொத்தம் 21 ஆயிரத்து 692 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

அதாவது ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வைத்துள்ள கோரிக்கை என்பது கடும் பேரிடராக (Calamity of severe nature) அறிவிக்க வேண்டும் என்பதும், 21 ஆயிரம் கோடியை நிவாரணமாகத் தர வேண்டும் என்பதும் ஆகும். இந்த இரண்டும் கிடையாது என்பதைத் தான் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்குத் தெரிந்த ஆணவ மொழியில் சொல்லி இருக்கிறார். திமுக அரசையும், முதலமைச்சரையும் அவமானப்படுத்துவதாக நினைத்து, தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பாதிப்பையும், பாதிக்கப்பட்ட மக்களையும், அவர்கள் அடைந்த துயரங்களையும், அனுபவிக்க இருக்கும் துன்பங்களையும் கவனத்தில் கொள்ளாமல் ' தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது, அப்படி இதுவரை அறிவித்தது இல்லை' என்று சொல்வதன் மூலமாக தனது இரக்கமற்ற குணத்தைத் தான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிப்படுத்தி இருக்கிறார். மக்கள் துன்ப துயரங்களை அடைந்து வரும் நேரத்தில் அவர்களைக் கேலி செய்வதைப் போல இருக்கிறது அவர் அளித்திருக்கும் பேட்டி.

ஒன்றிய அரசின் அமைப்புகளின் சார்பில் என்னனென்ன மீட்புப்பணிகள் நடந்துள்ளது என்பதை எல்லாம் நிதி அமைச்சர் தனது பேட்டியில் சொல்லி இருக்கிறார். இது எதுவும் புதிய செய்தி அல்ல. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் நெல்லையில் வைத்து அளித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொன்னவை தான். மத்திய பாதுகாப்புப் படையும் இராணுவமும் எந்த வகையில் ஒத்துழைத்து மீட்புப் பணியைச் செய்துள்ளது என்பதை முதலமைச்சரே விளக்கிச் சொல்லி விட்டார். மத்திய பாதுகாப்புப் படை ஒத்துழைக்கவில்லை என்றோ, இராணுவம் வரவில்லை என்றோ நாங்கள் குற்றச்சாட்டை வைக்கவுமில்லை. நிதி அமைச்சர் சொன்னது புதிய செய்தியும் அல்ல. தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்புகளை வரிசையாகப் பார்த்தாலே மத்திய பாதுகாப்புப் படை குறித்த செய்திகள் அதிகம் உள்ளன.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளிக்க இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், தமிழ்நாட்டுக்கான நிதியை அறிவிக்கவே அவர் பேட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக நான் முதலில் நினைத்தேன். 'நிதி கிடையாது' என்று சொல்வதற்காக எதற்காக பேட்டி தர வேண்டும்?

பொய்யும் வன்மமும் கலந்த குற்றச்சாட்டுகளை வைப்பதன் மூலமாக தமிழ்நாடு அரசின் மீது தவறான கற்பிதத்தை உருவாக்க மீடியாக்களை நிர்மலா சீதாராமன் பயன்படுத்தி இருக்கிறார்.தமிழ்நாடு அரசு கேட்டது 21 ஆயிரம் கோடி. ஆனால் அதில் இதுவரை வந்திருப்பது 450 கோடி மட்டுமே. இதுவும் தமிழ்நாடு அரசுக்கு வழக்கமாக வழங்கப்பட வேண்டிய நிதி தானே தவிர, இப்போது ஏற்பட்ட புயல் - மழை - வெள்ளச் சேதங்களில் இருந்து மீட்க தரப்பட்ட சிறப்பு நிதி அல்ல.

இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் செலவுகளைச் சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி (SDRF) என்ற நிதி உள்ளது. எந்தெந்த மாநிலத்திற்கு இந்த நிதி எவ்வளவு என்பதை ஐந்தாண்டு காலத்திற்கு ஒருமுறை ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் நிதிக் குழு (Finance Commission) தீர்மானிக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டினுடைய SDRF-க்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 1,200 கோடி ரூபாய் ஆகும். இதில் 75 விழுக்காட்டை, அதாவது 900 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தரவேண்டும். 25 விழுக்காட்டை, அதாவது 300 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஏற்றிடவேண்டும்.

ஒன்றிய அரசின் பங்கானது ஆண்டுதோறும் இரு தவணைகளில் நமக்கு அளிக்கப்படுகின்றது. அதாவது இரண்டு தடவை தலா 450 கோடி ரூபாய் நமக்கு அளிக்கப்படும். ஒரு இயற்கைப் பேரிடரின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும்போது இந்த SDRF நிதி போதவில்லை என்றால், அந்த இயற்கைப் பேரிடரைக் கடும் இயற்கைப் பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும், தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தையும், இவ்வாறு கடும் பேரிடர்களாக அறிவித்து NDRF-ல் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என்றுதான் நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் NDRF-இல் இருந்து இதுவரை நமக்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

மத்திய அரசிடமிருந்து நமக்கு வந்த 450 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது SDRF-க்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய இரண்டாவது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல. தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய பாஜக அரசு எத்தகைய அலட்சியத்தோடு நடத்துகிறது என்பதற்கு உண்மையான எடுத்துக்காட்டு இது.

2015-ஆம் ஆண்டு முதல் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய மொத்தத் தொகை என்பது ரூ.1,27,655.80 கோடி ஆகும். இதில் மத்திய பாஜக அரசால் ரூ.5884.49 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிய தொகையில் 4.61 விழுக்காடு மட்டுமே ஆகும். அதாவது பாஜக தமிழ்நாட்டில் வைத்திருக்கும் வாக்கு சதவிகிதத்திற்கு அதற்கு ஏற்ப நிதி ஒதுக்குவார்கள் போலும். தமிழ்நாடு குறித்தும், வாழும் மக்கள் குறித்தும் துளியும் அக்கறையற்றதாக மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இதனை மறைப்பதற்காக நிருபர்கள் மீது பாய்ந்துள்ளார் நிதி அமைச்சர். அவரது கோபத்துக்குப் பின்னால் இருக்கும் குதர்க்கம் அனைவரும் அறிந்ததுதான்.

நிதி அமைச்சர் தனது பேட்டியில், பிரதமர் - முதலமைச்சரது சந்திப்பையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார். 'ஒரு நாள் முழுக்க டெல்லியில் இருந்த முதலமைச்சர், போகிற போக்கில் சந்தித்துக் கொள்ளலாம் என்ற தோரணையில் பிரதமர் மோடியை இரவில் சந்தித்தார்' என்று சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன். இந்தியப் பிரதமர் தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கான நேரத்தை அவர் தான் தீர்மானிப்பார் என்பதைக் கூட தெரியாதவராக ஒருவர் நிதி அமைச்சராக இருப்பது வேதனை தருகிறது. மதியம் 12.30 மணிக்கு வரலாம் என்று நேரம் ஒதுக்கியது பிரதமர் அலுவலகம். அதன்பிறகு இரவு 10.30 மணிக்கு வரலாம் என்று நேரத்தை மாற்றியது பிரதமர் அலுவலகம். எனவே இரவில் சந்திக்க நேரம் ஒதுக்கியது பிரதமர் அலுவலகம் தானே தவிர, முதலமைச்சர் அல்ல. தமிழ்நாடு முதலமைச்சர் யாரிடமும், எந்த சூழலிலும் தோரணை காட்டக் கூடியவர் அல்ல.

'மழை பெய்யும் போது முதலமைச்சர் எங்கே இருந்தார்?' என்று கேட்கிறார் நிர்மலா சீதாராமன். 'இந்தியா' கூட்டணி கூட்டத்துக்குச் சென்றிருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். 'இந்தியா' என்றாலே இவர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது. அதனைத் தான் நிர்மலா சீதாராமன் வெளிப்படுத்தி இருக்கிறார். பிரதமரைச் சந்திப்பதற்காகவும் சேர்த்தே தான் முதலமைச்சர் அவர்களின் டெல்லி பயணம் திட்டமிடப்பட்டது. பற்றி எரிந்த மணிப்பூருக்கு மத்திய மாண்புமிகுக்கள் ஒரு தடவையாவது போனார்களா? மயிலாப்பூருக்கு வந்து காய்கறி வாங்கி போட்டோ எடுத்துக் கொண்ட நிதி அமைச்சர், 4-ஆம் தேதி புயல் - வெள்ளப் பாதிப்புகளைப் பார்க்கவாவது ஒரு முறை சென்னை வந்தாரா? என்று எங்களாலும் கேட்க முடியும். டெல்லி சென்ற ஒரே ஒரு நாள் தவிர - அனைத்து நாட்களும் மக்களோடு மக்களாகத்தான் இருந்தார் முதலமைச்சர். இதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவார்கள்.

'ஒரே நாடு - ஒரே தேசம்' என்பதில் உண்மையான அக்கறை இருப்பவராக இருந்தால் தமிழ்நாட்டில் நடந்த பாதிப்புகளை கடும் பேரிடராக அறிவியுங்கள், தமிழ்நாடு அரசு கோரும் நிவாரண நிதியை விடுவியுங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது கண்டங்களை தெரிவித்துள்ளார்.

Tags :
#ThenkasiChennaifundHeavy rainKANNIYAKUMARINellainews7 tamilNews7 Tamil UpdatesNirmala sitharamanRainRelief FundSouthern TamilNaduThangam thennarasuThoothukudiTN GovtTn RainsTuticorin Rainsunion govtWeatherWeather Update
Advertisement
Next Article