“கேளராவிற்கு கல்வி சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்!” - கல்லூரிகளுக்கு கோவை கல்வி இணை இயக்குநர் அறிவுறுத்தல்!
கோவை மண்டலத்துக்குட்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளை கேரளாவிற்கு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரத்தில் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் பலியானார். இதனைத்தொடர்ந்து சிறுவனுடன் தொடர்பில் இருந்த நபர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் திருவனந்தபுரம், பாலக்காடு மாவட்டங்களைச் சேர்ந்த சிலருக்கு நிபா வைரஸ்க்கான அறிகுறிகள் இருப்பதாகதெரிய வந்துள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் தங்கள் கல்லூரி மாணவர்களை கேரளாவிற்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.