ஆயுத கடத்தல் வழக்கில் கைதான சினிமா பைனான்சியர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
ஆயுத கடத்தல் வழக்கில் கைதான சினிமா பைனான்சியர் ஆதிலிங்கத்தின் மீது என்ஐஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு சிறிய வகை படகு
மூலம் கடத்திவரப்பட்ட 327 கிலோ ஹெராய்ன், 5 ஏகே 47 துப்பாக்கிகள் பறிமுதல்
செய்யப்பட்டது. இவ்விவகாரத்தில் விக்னேச பெருமாள், ஐயப்ப நந்து, செல்வகுமார்,
குணசேகரன், புஷ்ப ராஜா, முகமது அஸ்மின், அழகப்பெருமாக சுனில் காமினி பொன்சகோ, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, தனுகா ரோஷன் லடியா, வெள்ள சுரங்கா, திலீபன் உள்ளிட்டோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் விடுதலை புலிகள் அமைப்பை மீண்டும் புத்துயிர் பெற வைப்பதற்காக ஆயுதங்கள் மற்றும் நிதி திரட்டுதல் போன்ற விவகாரத்தில்
ஈடுபட்டதும், அதற்காக சர்வதேச போதை பொருள் கும்பலுடன் சேர்ந்து போதை பொருள்
கடத்தப்பட்டதும் தெரியவந்தது. மேலும் இவர்களுடன் தொடர்புடைய சென்னை சேலையூரை சேர்ந்த ஆதிலிங்கம் என்பவரை 14வது நபராக என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள முக்கிய போதைபொருள் கடத்தல் மன்னன் குணசேகரனின் பினாமியாக செயல்பட்டதும் தெரியவந்தது.
மேலும் நடிகை ஒருவருக்கு உதவியாளராக செயல்பட்டதும் தெரியவந்தது. குறிப்பாக போதைப்பொருள் மற்றும் ஆயுதகடத்தல் மூலமாக கிடைக்கப்பெறும் பணத்தை
குணசேகரன் மூலமாக ஆதிலிங்கம் பல்வேறு சட்டவிரோத பணப்பரிமாற்றம் மேற்கொண்டது தெரியவந்தது. குணசேகரன் தலைவராகவும், ஆதிலிங்கம் துணை தலைவராகவும் இருக்கும் வகையில் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா என்ற அரசியல் கட்சியை தமிழ்நாட்டில் ஆரம்பித்து கடத்தலில் வரும் பணத்தை நிதி பரிமாற்றம் செய்ய
பயன்படுத்தியது தெரியவந்தது.
போதைப் பொருள் கடத்தல் மூலமாக கிடைக்கப்படும் பணத்தை ஹவாலா பணப்
பரிமாற்றத்தில் பயன்படுத்தியது விசாரணையில் அம்பலமானது. மேலும் தமிழ் சினிமா துறையில் பணிபுரிந்து கொண்டே எல்டிடிஈ அமைப்பின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை இந்த வழக்கில் 16 பேர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 14 ஆவதாக ஆதி லிங்கத்தின் மீது குற்றப்பத்திரிகை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்துள்ளது.