“சென்னைக்கு அடுத்த புயலா? வதந்திகளை நம்பாதீர்..!” - தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்
அடுத்த வாரம் மீண்டும் ஒரு புயல் சென்னையை தாக்க உள்ளதாக பரவி வரும் தகவல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட் மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.
இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. வெள்ளம் வடியாத பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
இதனிடையே சென்னையை நோக்கி அடுத்த புயல் உருவாக உள்ளதாக கடந்த நில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. வானிலை ஆய்வு மையம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில், அடுத்த புயல் குறித்த பரவிய தகவல் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படியுங்கள் : சென்னையின் அனைத்து வழித்தடங்களிலும் மாநகரப் பேருந்துகள் இயக்கம்..!
இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், சென்னையை நோக்கி அடுத்த புயல் வருவதாக வெளிவரும் தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வரும் 10-ம் தேதி அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இந்திய பெருங்கடல் பகுதியை நோக்கி வரலாம் என்றும், அதனால் சென்னைக்கு பாதிப்பு ஒன்றுமில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.