நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் மருத்துவ செலவுகளை அரசு ஏற்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
மர்ம நபர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு உட்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் மருத்துவ செலவுகளை அரசு ஏற்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு. இவர் நேற்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதும், மற்ற நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் நோட்டம் விட்டுள்ளனர். இவரைப் பற்றிய தகவல்களையும் விசாரித்துள்ளனர்.
தன்னை நோட்டம் விடும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறைக்கு நேசபிரபு தகவல் தெரிவித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் கூறிய நேசபிரபுவிடம், நேரில் வந்து புகார் அளிக்கும்படியும், போதிய காவலர்கள் இல்லை என்றும் அலட்சியம் காட்டியுள்ளனர்.
இதையடுத்து மீண்டும் மர்ம நபர்கள் பின்தொடர பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டுள்ளார். அவ்வாறு காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதனால் கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதை அறிந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் மெத்தனப்போக்கில் செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.இந்நிலையில், நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :
“தமிழ்நாட்டில் சமீப காலமாக விவசாயிகள், செய்தியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாகஅதிகாரமிக்க அரசியல் கட்சிகளைச் சார்ந்த உள்ளாட்சி அமைப்புகளுடைய பிரதிநிதிகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதும், கட்டப்பஞ்சாயத்துகளில் தீவிரமாக களமிறங்கி வருகின்றனர். வணிகர்களை மிரட்டி பணம் பறிப்பது கொடுக்க மறுத்தால் கடைகளை அடித்து உடைப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்வது வேதனை அளிக்கிறது.
விவசாயிகள் மீது தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது. மக்கள் பிரச்சினை எடுத்துரைக்கும் முன்னணி தலைவர்கள் கூட பல்வேறு அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இது மாதிரியான நடவடிக்கைகள் தீவிரமடைவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. கட்டுக்கடங்காத மது விற்பனை என்கிற பெயரில் ஆங்காங்கு மது அருந்தும் கூடங்கள் (பார்கள்) திறப்பதும் சமூக விரோதிகளின் செயல்பாட்டுக்கான திட்டமிடும் களமாக மாறி வருகிறது.
கஞ்சா விற்பனை தீவிரமடைந்துள்ளது. பள்ளி,கல்லூரிகளில் மாணவர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகி சமூக விரோத செயல்கள் அன்றாடம் அரங்கேறி வருவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். இதனை தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலம் தமிழகம் மிகப் பெரிய சமூக விரோத களமாக மாறி சீரழிந்துவிடும் என எச்சரிக்கிறேன். முதலமைச்சர் அவசரகால நடவடிக்கைகள் மேற்கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும்.
மக்கள் பிரச்சனைகளை அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களை துணிவுடன் களத்தில் நின்று எடுத்துரைக்கும் செய்தியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக பல்லடம் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசப்பிரபு மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும். முதலமைச்சர் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் நேசப்பிரபு மருத்துவ செலவுகள் முழுமையையும் அரசு ஏற்க வேண்டும். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள உதவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.