For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சக்தி கலெக்டிவ் உண்மை சரிபார்ப்பு சர்வதேச குழு பங்களிப்பில் போலி செய்திகளை இனம் கண்டு மக்களுக்கு எடுத்துரைத்ததில் பெருமிதம் கொள்ளும் நியூஸ்7 தமிழ்!

08:36 PM Jun 26, 2024 IST | Web Editor
சக்தி கலெக்டிவ் உண்மை சரிபார்ப்பு சர்வதேச குழு பங்களிப்பில் போலி செய்திகளை இனம் கண்டு மக்களுக்கு எடுத்துரைத்ததில் பெருமிதம் கொள்ளும் நியூஸ்7 தமிழ்
Advertisement

2024-மக்களவைத் தேர்தல் நேரத்தில் போலி செய்திகளை இனம் கண்டு சக்தி கலெக்டிவ் உண்மை சரிபார்ப்பு சர்வதேச குழு பங்களிப்பில் மக்களுக்கு எடுத்துரைத்ததில் பெருமிதம் கொள்கிறது நியூஸ்7 தமிழ்.

Advertisement

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இத்தேர்தலின் போது பொதுமக்கள் சரியான தகவல்களை அறிந்து போலி செய்திகளை இனம்கண்டு தேர்தலை எதிர்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் சக்தி கலெக்டிவ் உண்மை சரிபார்ப்பு சர்வதேச குழு தனது பணியை செய்தது.

300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பங்களிப்புடன் 50 செய்தி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 28 மாநிலங்களில் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் சர்வதேச சரிபார்பு நிபுணர்களுடன் சக்தி கலக்டிவ் உண்மை சரிபார்ப்பு குழு செயல்பட்டது.  இந்நிலையில், இக்குழுவில் இணைந்து செயல்பட தமிழ்நாட்டில் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மட்டுமே தேர்வாகியிருந்தது.  இதன் வாயிலாக இனம்,  மதம்,  மொழி உள்ளிட்ட காரணிகளை மையப்படுத்தி பொதுமக்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பும் விதமாக சமூக வலைதள பக்கங்களில் உலாவிய பல போலி செய்திகளை கண்டறிந்து,  அவற்றின் உண்மை தன்மையை சரிபார்த்து மக்களுக்கு சரியான தகவல்கள் கொண்டு செல்லப்பட்டன.

பெங்காலி,  குஜராத்தி என நாடு முழுவதும் அந்தந்த மாநில மொழிகளில்  வெளியான போலி தகவல்கள் குறித்து ஆய்வு செய்து,  நாட்டின் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் தெரியப்படுத்தியது இந்த  உண்மை சரிபார்ப்பு சர்வதேச குழு.  இதே போன்று தமிழ்நாட்டிலும் மக்களவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக பரப்பப்பட்ட போலி தகவல்கள் குறித்து சக்தி கலெக்டிவ் உண்மை சரிபார்ப்பு சர்வதேச குழு ஆய்வு செய்து சரியாக தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்தது.

குறிப்பாக, மக்களவை தேர்தலில் தேசிய தலைவர்கள் பேசும் ஒரு சில வார்த்தைகள் கூட அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளின் வாக்கு சதவீதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் தேர்தல் நேரத்தில் இருந்தது.  அப்படி இருக்கையில்,  பல ஆண்டுகளுக்கு முன் தலைவர்கள் பேசிய கருத்துகள் தற்போது பேசியதாக போலியாக பல தகவல்கள் பரப்பட்டன.  அதே போன்று மதரீதியிலான தாக்குதல்களை தூண்டும் பழைய காணொலிகள் தற்போது நடந்ததாக சமூக வலைதள பக்கங்களில் பரப்பப்பட்டன.  இந்த போலி தகவல்கள் அனைத்தையும் கண்டறிந்து சரியான நேரத்தில் அந்தந்த பிராந்திய மக்களுக்கு கொண்டு சேர்ப்பதோடு,  தேசிய அளவிலான அரசியல் பிரச்னைகளை அனைத்து மொழி மக்களும் அறிந்துகொள்ளும் வகையில், சக்தி கலெக்டிவ் உண்மை சரிபார்ப்பு சர்வதேச குழு பணியாற்றியது.

இதில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து கட்சிகள் தொடர்பான தகவல்களையும் எந்த பாகுபாடுமின்றி ஆராய்ந்து, தவறாக பரப்பப்பட்ட தகவல்கள் குறித்து கண்டறிந்து மக்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.

அதிலும் நாடு முழுவதும் பல்வேறு பிராந்திய மொழிகளில் வெளியான செய்திகளை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து பிரசுரம் செய்ததோடு,  உண்மை சர்பார்ப்பு குழு சார்பில் தமிழில் வெளியான செய்திகளையும் வெகுஜன ஊடகம் என்கிற அடிப்படையில் நியூஸ்7 தமிழ் வலைதள பக்கத்தில் மீண்டும் மறுபிரசுரம் செய்து அனைத்து மக்களுக்கும் உண்மை தகவல்கள் கொண்டுசேர்க்கப்பட்டன.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 97 கோடி பேர் வாக்குரிமை பெற்ற நிலையில்,  அதில், 64.20 கோடி பேர் வாக்களித்தனர்.  இத்தனை கோடி மக்கள் பங்கேற்ற தேர்தலில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காது தடுத்ததில் சக்தி கலக்டிவ் உண்மை சரிபார்ப்பு சர்வதேச குழுவின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. இந்த குழுவில் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியும் தனது பங்களிப்பை தந்ததில் பெருமிதம் கொள்கிறது.  அதோடு, இக்குழுவின் ஒரு அங்கமாக இருந்தது ஊடகவியலாளர்களுக்கு பல்வேறு புது அனுபவத்தையும், செய்திகளின் உண்மை தன்மை குறித்து ஆராய்வது தொடர்பான பயிற்சியையும் தந்தது என்றால் அது மிகையாகாது.  மேலும் சக்தி கலெக்டிவ் உண்மை சரிபார்ப்பு சர்வதேச குழுவினருடனான இந்த பணி,  போலி செய்திகள் குறித்த கூடுதல் விழிப்புணர்வை ஊடகவியலாளர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலை மையப்படுத்திய சக்தி கலெக்டிவ் உண்மை சரிபார்ப்பு சர்வதேச குழுவின் பணி சிறப்பாக நிறைவுற்ற நிலையில் அதன் வெற்றி நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் கொண்டாடப்பட்டது.

Tags :
Advertisement