நியூஸ் 7 தமிழ் நடத்திய மாபெரும் கல்வி கண்காட்சி - ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு!
சேலம் மற்றும் தஞ்சையில் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நியூஸ்7 தமிழ் நடத்திய மாபெரும் கல்வி கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு அடுத்து என்ன படிக்கலாம் என்கிற குழப்பம் மாணவர்கள் மத்தியில் எழுவதுண்டு. உயர்கல்வி படிப்பதற்கான போதிய வழிகாட்டுதல் இல்லாமல் பல மாணவர்கள் ஏதாவது ஒரு கல்வி சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க முடியாமல் திணறி வருகின்றனர். எனவே மாணவர்களுக்கு மேற்படிப்பு சார்ந்த வழிகாட்டு முகாம்கள் அடங்கிய மாபெரும் கல்வி கண்காட்சியை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நியூஸ்7 தமிழ் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு சேலத்தில் பெஸ்ட் கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து நியூஸ் 7 தமிழ் பிரமாண்ட கல்வி கண்காட்சியை ஏற்பாடு செய்தது. இந்த கல்வி கண்காட்சியில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி ஆலோசனைகள் மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கல்லூரிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பிரதிநிதிகள் மேசைகள் அமைத்து மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர். சுமார் 45 அரங்குகள் அமைக்கப்பட்டு கல்வி சார்ந்த ஆலோசனைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சேலம் ஏவிஎஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் அ.சீனிவாசன், பிரபல திரைப்பட நடிகர் தீனா, வின் யுவர் வீக்னெஸ் மோடிவேஷன் அகாடமியின் தலைமைப் பொறுப்பாளர் ஐ.ஜெகன், கல்வி ஆலோசகர் கே.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உயர்கல்வி சார்ந்த வழிகாட்டுதலும் விழிப்புணர்வும் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கல்லூரிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் தங்களுக்கு தேவையான தகவல்களை கேட்டறிந்தனர். ஆலோசகர்களிடம் சந்தேகங்களை தீர்த்துக் கொண்டனர். பெஸ்ட் கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து நியூஸ் 7 தமிழ் நடத்திய இந்த கல்வி கண்காட்சி, உயர்கல்வி குறித்த தெளிவான வழிகாட்டுதலை வழங்கியதாக, கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள் தெரிவித்தனர்.அதேபோல, தஞ்சாவூரிலும் E2W ஸ்டடி சென்டர் - நியூஸ்7 தமிழ் இணைந்து மாபெரும் 2 நாள் கல்வி கண்காட்சி நடத்தியது. ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த கல்வி கண்காட்சியில் தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான கல்லூரிகள் பங்குபெற்றன. மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல துறை கல்லூரிகளின் அரங்குகள் அமைக்கப்பட்டன. வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கும் சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள், எல்லா கல்லூரிகளிலும் உள்ள பாடப்பிரிவுகள், கல்விக்கட்டணம் உள்ளிட்ட விவரங்களை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில் இந்தக் கல்வி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு, உயர்கல்வி குறித்த தங்களுக்கு தேவையான தகவல்களை கேட்டறிந்தனர்.
கல்லூரிகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் ஸ்பாட் அட்மிஷனும் நடத்தப்பட்டன. பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, கட்டணச் சலுகை, பெற்றோர் இல்லாதவர்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டன.