நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மற்றும் தாம்பரம் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் இணைந்து வெள்ள பாதிப்பை சீர் செய்தனர்!
ஒன்றுபட்ட தாம்பரம் மாநகராட்சி அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் இணைந்து உயிரை பணயம் வைத்து ஏரி அடைப்புகளை அகற்றி வெள்ளநீர் குடியிருப்புக்குள் புகாமல் தடுத்தனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.
சென்னையின் போரூர், காரப்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, முடிச்சூர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவு முதல் 15 அடி வரை வெள்ள நீர் சூழ்ந்தது. சில பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது. மக்கள் உள்ளேயே சிக்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் 40 மணி நேரமாக மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை. மக்கள் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மிகவும் தாழ்வான பகுதிகளில் இருந்து குறிப்பாக பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, செம்பாக்கம், மாடம்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல், கீழ்கட்டளை, அஸ்தினாபுரம், நெபுலிச்சேரி, திருநீர்மலை போன்ற இடங்களில் இருந்து உடனடியாக மீட்பு நடவடிக்கை செய்ய பல்வேறு கோரிக்கைகள் பலதரப்பு மக்களிடமிருந்து வந்தது.
இதனை அடுத்து ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே என்ற பாரதியின் கவிதைக்கு ஏற்ப உடனடியாக தாம்பரம் மாநகராட்சியில் பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங்களின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு மீட்பு பணி குறித்து ஆலோசனை நடத்தி களத்தில் மீட்பு பணிகளை செய்ய முனைவர் லயன் கோவிந்தராஜன் தலைமையில் மற்றும் ஆலோசனையின் படி நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் இணைந்து உயிரை பணயம் வைத்து ஏரி அடைப்புகளை அகற்றினர்.
பெருங்களத்தூர், பீர்க்கங்காரனை பகுதியை சார்ந்த PP குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் மகேந்திர பூபதி மற்றும் அந்த நலச் சங்கத்தின் மற்ற நிர்வாகிகள் செயல் வீரர்கள், அதேபோன்று பம்மல் நலவாழ்வு சங்கம் நண்பர்கள் குழுவில் அங்கம் வகிக்கும் செயல்வீரர்கள் ஆகியோர மீட்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பெரும் சேதத்தை தவிர்த்ததோடு பல உயிர்களையும் காப்பாற்றினர்.
அதோடு, கடும் மழையும் பொருட்படுத்தாமல் ஏரியில் உள்ள ஆகாயத்தாமரை எல்லாம் அகற்றி, ஊருக்குள்ளே மழை நீர் செல்லாத வண்ணம் வழிவகை செய்தார்கள்.