சென்னை எத்திராஜ் கல்லூரி மற்றும் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி இணைந்து நடத்திய ‘மண்ணும் மரபும்’ நிகழ்ச்சி!
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியுடன் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி இணைந்து மண்ணும் மரபும் என்ற நிகழ்ச்சியை நடத்தியது.
சென்னை எழும்பூரில் எத்திராஜ் மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியுடன் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி இணைந்து மண்ணும் மரபும் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சியானது ஜனவரி 3-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க நாளில் சிறப்பு விருந்தினராக நீதிபதி கற்பக விநாயகம், நியூஸ்7 தொலைக்காட்சியின் C.O.ஷேம், எத்திராஜ் கல்லூரியின் சேர்மன் மைக் முரளிதரன், தலைமை ஆசிரியர் உமா கௌரி, துணை தலைமை ஆசிரியர் விஜயா, துணை தலைமை ஆசிரியர் ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியின் இறுதி நாளில் கல்லூரி மாணவியர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. இந்த மண்ணும் மரபும் நிகழ்ச்சியில் 50ற்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு கிராமிய சூழலுக்கே காண்பவர்களை கொண்டு சென்றது. சென்னை நகர வாழ்க்கையில் ஒரு கிராமத்திற்கு சென்று வரும் பயண அனுபவத்தை இந்நிகழ்வு ஏற்படுத்தியது.
இந்நிகழ்ச்சியின் 3 நாட்களில் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பறை நிகழ்ச்சி, மற்றும் வீதி நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த மண்ணும், மரபும் நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவிகள் மற்றும் மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் வந்து கண்டுகளித்தனர். இயற்கை உணவு வகைகளும், மரக்கன்றுகளும் கிராமிய சூழலை ஏற்படுத்தும் அமைப்புகளும் இந்நிகழ்வின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருந்தது.