“போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்குவதில் போலீசார் பாகுபாடு காட்டுவதில்லை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“போராட்டங்களை நடத்த அனுமதி வழங்குவதில் போலீசார் பாகுபாடு காட்டுவதில்லை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடைய யாராக இருந்தாலும் அவருக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என கோரப்பட்டது. மேலும் அண்ணா பல்கலை பதிவாளரை நீக்க வேண்டும் எனவும் விவாதங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“போராட்டம் நடத்த வேண்டும், ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றால் முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும். அனுமதிக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு மட்டுமே அனுமதி. அது காவல்துறையின் கட்டுப்பாடு. நேற்றுக்கூட ஆளுங்கட்சி சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆளுங்கட்சியாகவே இருந்தாலும் அனுமதியின்றி போராட்டம் நடத்திய திமுகவினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. போராட்டங்களை நடத்த அனுமதி வழங்குவதில் போலீசார் பாகுபாடு காட்டுவதில்லை” என்றார்.