நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | பாலம் கட்டும் பணி தாமதம் தொடர்பாக அரசு அதிகாரிகள் விளக்கம்...
பாலம் கட்டும் பணியில் தாமதம் ஏற்பட்டது தொடர்பாக நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், பாலம் கட்டுவதற்கான தாமதம் குறித்து அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் சின்னமயிலாறு காணிக்குடியிருப்பு மக்களுக்கு பாலம் கட்டுவதற்கு ரூபாய் 85 லட்சம் தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்தும் மத்திய அரசு அனுமதி வழங்காமல் மூன்று மாதம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கூறுகையில், பாலத்தை தாங்கள் தான் கட்டுவோம் என்று கூறி நிதி உத்தரவை பெற்றுக் கொண்ட வனத்துறை (களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம்) 2021 முதல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல முறை அறிவுறுத்திய பிறகு தங்களிடம் தகுந்த பொறியாளர்கள் இல்லாததால் கட்டுமான மேற்கொள்ள இயலவில்லை என்று கூறிவிட்டனர்.
இப்போது விக்கிரமசிங்கபுரம் நகராட்சி மூலம் பாலத்தை கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டபோது மத்திய அரசிடம் அனுமதி வாங்கினால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று வனத்துறையினர் தெரிவித்து விட்டனர். எனவே மத்திய அரசிடம் அனுமதி வாங்குவதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு சுமார் மூன்று மாத காலங்களாக நிலுவையில் உள்ளது. மேலும் இரும்பு பாலம் கட்டுவதற்காக "சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட"த்தின் கீழ் ரூ.85 லட்சம் நிதி ஒதுக்கீடு அரசால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. என அரசு அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.