நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | 15 ஆண்டுகள் சுத்தம் செய்யப்படாமல் இருந்த வீட்டில் இருந்து 4 டன் குப்பைகள் வெளியேற்றம்!
கோவையில் 15 வருடங்களாக வீட்டை சுத்தம் செய்யாமல் தாய் மற்றும் மகள் வாழ்ந்து வந்த நிலையில், நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மாநகராட்சி ஊழியர்கள் வீட்டை சுத்தம் செய்தனர்.
கோவை மாநகராட்சி காட்டூா் பகுதியில் ஒரு தனியாா் அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இக்குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் ருக்குமணி (60) மற்றும் அவரது மகள் திவ்யா (40) ஆகியோர் வசித்து வருகின்றனர். இருவரும் வீட்டை விட்டு வெளியில் வராமலும் இருந்தனர். இதனால், அக்கம்பக்கத்தினருடன் எவ்விதப் பேச்சுவாா்த்தையும் இல்லாமல் இருந்துள்ளனா்.
மேலும், இவர்கள் 15 வருடங்களாக வீட்டைச் சுத்தம் செய்யாததால், வீடு முழுக்க குப்பை மேடாக காட்சியளித்தது. குப்பைக்குள் எறும்பு, கரையான், பல்லி, பூரான், கரப்பான், எலி மூட்டைப்பூச்சி உள்ளிட்ட பூச்சிகளும் இருந்தன. மேலும் இவர்கள் இருவரும் கெட்டுப்போன உணவையும், சுகாதாரமற்ற புழுக்கள் நெளியும் நீரையும் குடித்தும் வாழ்ந்து வந்தனர்.
இத்தகைய சூழலால் அவா்கள் இருவருக்கும் பாதிப்பு ஏற்படுவதோடு, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மற்ற குடும்பங்களுக்கும் சுகாதார சீா்கேடு மற்றும் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம் என குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனா்.
அவர்கள் இருவருக்கும் மனநல பாதிப்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியானது. இந்த நிலையில், இதனை நியூஸ் 7 தமிழ் செய்தியாக வெளியிட்டது.
இதன் எதிரொலியாக மாநகராட்சி ஊழியர்கள் அவர்களின் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்து உணவு, குப்பைகள் என மொத்தம் 4 டன் கழிவுகள் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.