புதுமண தம்பதி கொலை செய்யப்பட்ட விவகாரம்: 2 பேர் நீதிமன்றத்தில் சரண்!
தூத்துக்குடியில் புதுமண தம்பதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் வள்ளியூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.
தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான வசந்தகுமார். இவரது மகன் மாரிச்செல்வம் (23), ஷிப்பிங் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். தூத்துக்குடி திருவிக நகர் பகுதியை சேர்ந்த பால் வியாபாரம் செய்து வரும்
முத்துராமலிங்கம் என்பவரது மகள் கார்த்திகா (21) என்பவரை வசந்தகுமார் காதலித்து
வந்துள்ளார்.
மாரிச்செல்வம் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர் என்பதால், இவர்களது காதலுக்கு கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கமும், அவரது உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த வாரம், கார்த்திகா தனது வீட்டை விட்டு வெளியேறி மாரிச்செல்வத்தை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து மூன்று நாட்களுக்கு முன்னர், முத்துராமலிங்கமும் அவருடன் சிலரும் முருகேசன் நகரில் உள்ள மாரி செல்வத்தின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர்.
இந்நிலையில் நவ.2-ம் தேதி மாலை வீட்டில் இருந்த மாரிச்செல்வம் மற்றும் கார்த்திகா ஆகிய இருவரையும் 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், வீட்டிற்குள் புகுந்து சராமரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியது. இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கார்த்திகாவின் தந்தை தான், சில ஆட்களை அனுப்பி கொலை செய்தது தெரியவந்தது.
இதையும் படியுங்கள் : “வெள்ளம் வருமோ என்று பதறிய காலம் மாறிவிட்டது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இதையடுத்து போலீசார் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இசக்கி ராஜா, ராஜபாண்டி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சில குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் புதுமண தம்பதிகளை கொலை செய்த வழக்கில் கருப்பசாமி, பரத் ஆகிய இருவர் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் முன்னிலையில் சரணடைந்தனர்.