பீகாரில் புதிதாக கட்டப்பட்டுவரும் பாலம் இடிந்து விபத்து - ஒருவர் பலி!
பீகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.
பீகார் மாநிலம் சுபால் மாவட்டம், மரிச்சா பகுதியின் அருகே உள்ள கோசி ஆற்றின் மீது 10.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு, ரூ.984 கோடி செலவில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த கட்டுமான பணிகளில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று (மார்ச்.22) காலை பாலத்தின் இணைப்புப்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 10 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தொழிலாளர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் இந்த விபத்தில் சிக்கிய அனைவரையும் மீட்டனர். இதில் ஒரு தொழிலாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.