புத்தாண்டு எதிரொலி - ஒரு கிலோ மல்லிகை ரூ.3000-க்கு விற்பனை!
புத்தாண்டையொட்டி மலர் சந்தைகளில் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தை, தென் தமிழகத்தின் பிரசித்தி
பெற்ற பூ வர்த்தக சந்தைகளில் ஒன்றாகும். நாளைய தினம் 2025 ஆங்கில புத்தாண்டு
பிறக்க உள்ள நிலையில், நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்களின் விலை பன்மடங்காக
உயர்ந்துள்ளது.
தற்போது பனிக்காலம் என்பதாலும், பருவ மழை பொழிந்து வருவதாலும் பூக்களின் வரத்து
வெகுவாக குறைந்துள்ளது. இது ஒரு காரணமாக இருந்தாலும் கூட, கோட்டை மலர் சந்தையை
சுற்றிலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பூ நிறுவனங்கள் அதிகம் உள்ளதால், அந்நிறுவனங்கள் புத்தாண்டிற்காக வெளிநாட்டிற்கு பூக்களை அனுப்புவதற்கு
சந்தையில் கொள்முதல் செய்வதாலும், பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் பிற மாவட்ட மலர் சந்தைகளுக்கு சில்லறையாகவும், மொத்தமாகவும் பூக்களை கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்வதற்காக, நிலக்கோட்டை மலர் சந்தையில் குவிந்துள்ளனர். இன்றைய தினம் நிலக்கோட்டை மலர் சந்தையில் கிலோ ஒன்றுக்கு பூக்கள் விலை..
மல்லிகை பூ - ரூ 3000.
முல்லைப் பூ - ரூ 1000-1300.
கனகாம்பரம் பூ - ரூ 1200.
ஜாதி பூ - ரூ. 800-900.
காக்கட்டான் - ரூ 900-1000.
சம்பங்கி பூ - ரூ 200- 300.
பன்னீர் ரோஜா - ரூ 250-300.
செண்டு மல்லி- ரூ.50-80.
செவ்வந்தி பூ - ரூ.180-250
மருகு - ரூ. 250
மரிக்கொழுந்து - ரூ.250
துளசி - ரூ. 50
நிலக்கோட்டை மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து மலர் சந்தைகளிலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகை, பிச்சிப்பூ, சம்பங்கி போன்ற பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நிலக்கோட்டை மலர் சந்தையில் உள்ள பூ வியாபாரி இதுதொடர்பாக அளித்த பேட்டியில், “2025 ஆங்கில புத்தாண்டு பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. நிலக்கோட்டை மலர் சந்தையில் இருந்து பூக்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது தொடர் பணி மற்றும் மழைக்காலம் என்பதால் பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இன்றைய தினம் ஒரு கிலோ மல்லிகை பூ 3ஆயிரம் ரூபாய்க்கு சென்றாலும், விவசாயிகளுக்கு பெரிய லாபம் ஈட்டி தரவில்லை. பூக்கள் வரத்து அதிகரித்தால் தான் வியாபாரிகளுக்கும் சரி, விவசாயிகளுக்கும் சரி அது பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.