புத்தாண்டு கொண்டாட்டம் - சபரிமலை மக்கள் வருகை அதிகரிப்பு!
புத்தாண்டையொட்டி கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலில் புத்தாண்டையொட்டி இன்று பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கூட்டம் காரணமாக, தரிசன நேரம், அபிஷேகம் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தினமும், 60 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. நிலக்கல்லில் உடனடி முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் எத்தனை பேர் வேண்டுமென்றாலும் நிலக்கல்லில் நேரடியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கிடையே நேற்று முதல் பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 30ம் தேதி மாலை திறக்கப்பட்டது. நேற்று (டிச. 31) முதல் மகர விளக்கு கால பூஜைகள் தொடங்கின. கடந்த, 26ம் தேதி வரை அதிகாலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே நடை திறக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று முதல் இரவு 1 மணி நேரம் கூடுதலாக நடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இன்று புத்தாண்டு தினம் என்பதால் சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.