புதிய ரூ.100, ரூ.200 நோட்டுகள் விரைவில் அறிமுகம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு !
இந்தியாவில் ரூ.1000, ரூ.500 நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெறுவதாக அறிவித்த நிலையில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது. இதையடுத்து ரிசர்வ் வங்கி புதிய ரூ.2000 நோட்டுகளை வெளியிட்டது. அதை தொடர்ந்து குறுகிய காலத்தில் ரிசர்வ் வங்கி மக்களிடம் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த சக்திகாந்த தாஸ் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து அதன் புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்றார். அவர் பதவியேற்ற சில நாட்களில் புதிய கவர்னர் கையெழுத்திட்ட ரூ.50 நோட்டு அறிமுகம் செய்ததுடன், ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கையெழுத்துடன் புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு விடப்படும் என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.