“வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க புதிய திட்டம்!” - சத்யபிரதா சாஹு விளக்கம்
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வாக்காளர்களுக்கு முறைகேடாக பணம் கொடுப்பதைத் தடுக்க வங்கிகள் கண்காணிக்கப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாஹு கூறியதாவது:
நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் அலுவலர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு வருகின்றன. கோவையில் பாதுகாப்பு பணியில் ஏற்கனவே மூன்று பிரிவு துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தலில் முறைகேடாக பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க, வங்கிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதிகமாக பணம் வரவு வைக்கப்பட்டாலும்,வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டாலும் உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பின் போது பணம் கொடுப்பது போன்று முறைகேடுகளில் ஈடுபட்டால், அவற்றை பொதுமக்களே நேரடியாக புகார் தெரிவிக்க சி-விஜில் என்ற செயலி உள்ளது. அதில் புகார் பதிவிடப்பட்ட 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயோதிகர்கள் இந்த தேர்தலில் சிரமம் இல்லாமல் வாக்களிக்க சக்சம் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க, தேர்தல் அதிகாரி வீட்டிற்கு சென்று நேரடியாக வாக்குகளை பெற முடியும்.
இவ்வாறு சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.