“இந்திய அணியை வீழ்த்த புதிய திட்டம்” - #PatCummins அதிரடி!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு ஆல்ரவுண்டர்களை அதிக அளவில் பயன்படுத்த ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டிருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆல்ரவுண்டர்களான கேமரூன் மற்றும் மிட்செல் மார்ஷை அதிக அளவில் பயன்படுத்த ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டிருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
பாட் கம்மின்ஸ் இது தொடர்பாக பேசியதாவது, “ஆஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டர்கள் இருப்பது அணிக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது. ஆனால், அணியில் உள்ள ஆல்ரவுண்டரை நாங்கள் நினைத்த அளவுக்கு இதுவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை. கடந்த 2 கோடைகால டெஸ்ட் தொடர்களில் ஆல்ரவுண்டர்களை அதிகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், இந்த முறை நடைபெறவுள்ள கோடை கால டெஸ்ட் தொடர் சற்று வித்தியாசமாக இருக்கப் போகிறது.
ஆல்ரவுண்டர்களான கேமரூன் கிரீன் மற்றும் மிட்செல் மார்ஷை அதிக அளவில் பந்துவீச்சில் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். கேமரூன் கிரீன் ஷீல்டு கிரிக்கெட்டில் பந்துவீச்சாளராக அறிமுகமானார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக அளவில் பந்துவீசியதில்லை. இந்த முறை அவரை பந்துவீச்சில் அதிகம் பயன்படுத்திக் கொள்வோம். கேமரூன் கிரீன் மற்றும் மிட்செல் மார்ஷுடன் சேர்த்து ஆஸ்திரேலிய அணிக்கு 6 பந்துவீச்சு தெரிவுகள் இருக்கும்” என தெரிவித்தார்.